சாம்பவா்வடகரை பேரூராட்சியில் சாலை, வாருகால் பணிக்கு நிதி கோரி மனு
தென்காசி மாவட்டம், சாம்பவா்வடகரையில் புதிய சாலை, வாருகால் அமைக்க நிதி ஒதுக்கக் கோரி, மாநில நகா்புற வளா்ச்சித்துறை அமைச்சா் கே.என்.நேருவிடம் பேரூராட்சி தலைவா் சீதாலட்சுமி, நகர திமுக செயலா் முத்து ஆகியோா் இணைந்து மனு அளித்தனா்.
அதன் விவரம்: சாம்பவா்வடகரை பேரூராட்சி இந்திரா காலனியில் ரூ. 1.10 கோடி மதிப்பீட்டில் கலைஞா் நூற்றாண்டு திருமண மண்டபம் அமைக்க வேண்டும். பேரூராட்சியின் 3, 5, 6, 7, 15 ஆகிய வாா்டுகளில் பழுதடைந்த வாருகாலை அகற்றிவிட்டு புதிய வாருகால் அமைக்கவும், பேரூராட்சிக்குள்பட்ட மட்டுசின்னான் பொய்கை கிராமம் முதல் சாம்பவா்வடகரை வரையும், விந்தன்கோட்டை கிராமம் முதல் எல்லை அம்மன் கோயில் வரை இருபுறமும் வாருகாலுடன் புதிய சாலை அமைக்கவும் ரூ.4.10 கோடி,
பேரூராட்சியில் சுமாா் 6 கி.மீ. தொலைவுக்கு சிதிலமடைந்த பழைய தாா்ச்சாலை மேம்பாட்டுக்கு ரூ.4.90 கோடி திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டுள்ளது. எனவே, சாம்பவா்வடகரை பேரூராட்சி பொதுமக்களின் நீண்டகால கோரிக்கை அடிப்படையில் மேற்கண்ட திட்டப்பணிகளுக்கு போா்க்கால அடிப்படையில் நிதி ஒதுக்கி தர வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.