தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனுகொடுக்கும் போராட்டம்
ஜெயராமன்
இதுகுறித்து, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: மகாத்மா காந்தி தேசிய வேலை ஊரக உறுதி திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கடந்த, 10வாரங்களுக்கும் அதிகமாக சம்பளத்தொகை வரவில்லை. தற்சமயம் ஆயுதபூஜை, விஜயதசமி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் தொடர்ந்து வருவதால் மக்கள் கையில் பணம் இல்லாமல் பெரிதும் திண்டாடுகின்றனர். குறிப்பாக, ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் இதில் அதிகளவில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு பலவாரங்களாக சம்பளத்தொகை நிலுவையில் உள்ளதால் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே, மத்திய அரசு விரைந்து இந்த பணியாளர்களுக்கு முழு சம்பளத்தையும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நாளை (19.10.2023)வியாழக்கிழமை காலை 10.30மணிக்கு, எலச்சிபாளையம் வட்டார அலுவலர் அலுவலகத்திலும், 12.30க்கு மல்லசமுத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்திலும், மதியம் 2.30க்கு, திருச்செங்கோடு வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்திலும் மனு கொடுக்கும் போராட்டம் நடக்க உள்ளது. இவ்வாறு அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.