வீட்டு மனை பட்டா வழங்க கோரி கிராம மக்கள் மனு
மனு அளிக்க வந்தவர்கள்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் அரசு அதிகாரிகள் பொது மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர். அப்போது வந்தவாசி வட்டம் கீழ்கொடுங்காலூர் ஊராட்சிக்குட்பட்டகோவிந்தசாமி நகரை சேர்ந்த ஊர்பிரமுகர் என். வெங்கடேசன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பொது மக்கள் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கீழ்கொடுங்காலூர் ஊராட்சிக்குட்பட்ட கோவிந்தசாமி நகரில் சுமார் 50 ஆண்டுகளாக 170க்கும் மேற்பட்டோர் வீடு கட்டி வாழ்ந்து வருவதாகவும் தங்களுக்கு வீட்டு மனைபட்டா வழங்கக்கோரி வந்தவாசி தாலுக்கா அலுவலகத்திலும், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரிடமும் மனு அளித்தோம். இதேபோல திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தனிடமும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்துள்ளோம். ஆனால் எங்களுக்கு இதுவரை வீட்டு மனை பட்டா வழங்கப்படவில்லை, எனவே எங்கள் மனுமீது விசாரணை செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் கோவிந்தசாமி நகரில் இருந்து மயான பாதைக்கு செல்ல பாதையில்லை. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதை அமைத்து தரவேண்டும் இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
இதேபோல கலசபாக்கம் வட்டம் ஆதமங்கலம்புதூர் மந்தைவெளி தெருவை சேர்ந்த ஆர்.ஆறுமுகம் குறைதீர்வு கூட்டத்தில் அளித்த மனுவில் 50 வருடங்களாக பயன்படுத்தி வரும் வழிபாதையில் செல்ல விடாமல் முன்செடிகளை ஏரி நீர்வரத்து கால்வாயில் வெட்டி போட்டு வழிபாதையில் செல்லவிடாமல் தடுத்துவருபவர்கள் மீதும் இதற்கு உடந்தையாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனு அளித்துள்ளார்.