மாணவர்கள் சுயவிவரம் சேகரிப்பு-நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மனு
ஆட்சியரிடம் மனு
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவ, மாணவியரிடம் வாக்காளர் அடையாள அட்டை எண், ஆதார் எண், தொலைபேசி எண் மற்றும் பெற்றோரின் வருவாய் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. கவர்னர் அலுவலகத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளதால் இவை சேகரிக்கப்படுவதாக மாணவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் நிலையில் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் தொலைபேசி எண்கள் சேகரிக்கபடுவது தேர்தல் விதிமீறல் எனவும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் வேளாண்மை பல்கலைக்கழக துணை ஆகியோர் கீதா லட்சுமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திராவிடர் பண்பாட்டுக் கூட்டியக்கத்தை சேர்ந்தவர்கள் மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வெண்மணி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியின் உத்தரவின் பெயரில் மாணவர்களிடம் இந்த தகவல்கள் சேகரிக்கப்படுவதாகவும் இது தேர்தல் விதிமுறை மீறல் என்பதால் தமிழ்நாடு ஆளுநர் மற்றும் வேளாண் பல்கலைகழக துணைவேந்தர் கீதாலட்சுமி மற்றும் துறை தலைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளதாகதெரிவித்தார்.
ஏற்கனவே தமிழகத்தின் பிற பகுதியில் பல்கலைக்கழகங்களுக்கு இதுபோன்ற ஒரு வாய்மொழி உத்தரவு வழங்கப்பட்டு பின்னர் அது திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டது எனவும் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தை பொறுத்த வரை தற்பொழுது வரை மாணவ , மாணவியரிடம் வாக்காளர் அட்டை எண் மற்றும் தொலைபேசி எண்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் இது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகஅவர் தெரிவித்தார். மாணவர்களிடம் தனிப்பட்ட விவரங்களை சேகரிக்க நடவடிக்கை எடுத்து வரும் தமிழக ஆளுநர் ரவி மற்றும் துணை வேந்தர் கீதா லட்சுமி, துறைத்தலைவர்கள், பதிவாளர் உள்ளிட்டோர் மீது தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி இருப்பதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.
கடந்த வாரம் இதே போன்று சர்ச்சை ஏற்பட்ட பொழுது கவர்னர் அலுவலகத்தில் இருந்து இதுபோன்ற எந்த உத்தரவும் தெரிவிக்கப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது எனவும் இந்நிலையில் தற்போது மீண்டும் வேளாண்மை பல்கலை கழக மாணவர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை எண்,தொலைபேசி எண் போன்றவை சேகரிக்கப்படுவது சர்ச்சைக்குள்ளாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.