வி.ஏ.ஓ.,மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்.டி.ஓ விடம் மனு

மனு அளித்த விவசாயிகள்
கோக்கலை எளையாம்பாளையத்தில் கல்குவாரிகள் அருகில் வீடுகள், விவசாய நிலங்கள் எதுவுமில்லை என பொய்யான சான்று வழங்கிய வி.ஏ.ஓ.,மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாயிகள் திருச்செங்கோடு ஆர்.டி.ஓ.,சுகந்தியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து, அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; எலச்சிபாளையம் ஒன்றியம், கோக்கலை எளையாம்பாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரிகள் இயங்கி வந்தன. இதனால், இப்பகுதியில் வாழும் விவசாயிகளுக்கு பல்வேறு இழப்புகள் ஏற்பட்டு விவசாயம் செய்ய முடியாமல் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தோம்.
குறிப்பாக, அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை, சாலைகள் சேதாரம், வெடிகள் வெடிக்கும் போது மக்கள் மீது விழுந்து உடல் உறுப்புகள் சேதாரம் உள்ளிட்ட பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்தோம். இதனால், வெறுப்புற்ற நாங்கள் ஒன்று திரண்டு கடந்த 2020ம் ஆண்டு குடியரசு தினத்தன்று நடந்த கிராமசபை கூட்டத்தில் கல்குவாரிகளை தடை செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதற்குபிறகு அங்கு பணிபுரிந்த வி.ஏ.ஓ., பிரபுகுமாரன் கல்குவாரிகள் அருகாமையில் வீடுகள் எதுவும் இல்லை என மீண்டும் குவாரிகள் இயங்குவதற்கு ஆதரவாக பொய்யான சான்று வழங்கியுள்ளார். இதுசம்மந்தமாக நாங்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார்மனு அளித்தும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, பொய்யான சான்று அளித்த வி.ஏ.ஓ.,மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்தமனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட ஆர்.டி.ஓ.,நடவடிக்கை எடுப்பதாக கூறியதையடுத்து, விவசாயிகள் கலைந்து சென்றனர்.
