கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு
திருப்பூர், சின்ன கோடாங்கிபாளையத்தில் சட்ட விரோதமாக செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
பல்லடம் சின்னகோடாங்கிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் கிறிஸ்துராஜிடம் கொடுத்த மனுவில்:- கோடங்கிபாளையம் பகுதியில் இயங்கி வரும் கல்குவாரி அனுமதி முடிந்து ஒரு மாதம் ஆகிறது. இந்நிலையில் சட்டவிரோதமாக வெடி மருந்துகளை பதுக்கி வைத்திருந்ததால் வெடி விபத்து ஏற்பட்டது.
இதனால் அங்கிருந்த கட்டிடம் இடிந்து தரை மட்டமானது. மேலும், அந்த பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டு கண்ணாடி ஜன்னல்கள் உடைந்தது. இப்படிப்பட்ட சூழலில் அந்த பகுதியில் எங்களுக்கு குடியிருக்கவே அச்சமாக உள்ளது. எந்த நேரத்தில் எந்த ஆபத்து ஏற்படும் என்ற பயத்தில் உள்ளோம். எனவே சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.