தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க மனு
மனு அளிக்க வந்தவர்கள்
கோயில் நகரம் பட்டு நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரத்திற்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பக்தர்கள் மற்றும் கிராமப்புறத்தை சேர்ந்த ஏராளமானோர் வந்து செல்கின்றனர். மேலும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பொதுமக்களும் அதிக அளவில் வரும் நிலையில் வணிக நிறுவனங்கள் பெயர் பலகையில் பல்வேறு மொழிகளில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தங்களது விளம்பரங்களை செய்து வருகின்றனர்.
மேலும் தமிழகத்தில் அதிகம் பேசக்கூடிய மொழியாக விளங்கும் தமிழின் சிறப்பை அளிக்கும் நோக்கில் இது போன்ற செயல்களை விளம்பர வணிக நிறுவனங்கள் மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து தமிழக அரசு பல்வேறு கட்டங்களில் தமிழ் மொழி வளர்ச்சிக்காக பல்வேறு அறிவுரைகளையும் சட்ட விதிகளையும் வகுத்து அதனை செயல்படுத்த கூறி வருகிறது.
குறிப்பாக விளம்பர , வணிக நிறுவனங்களில் பெயர் பலகை வைப்பதில் தமிழுக்கு அதிக அளவு முன்னுரிமை தர வேண்டும் எனவும் பிற மாநில மொழிகளிலும் அறிந்து கொள்ளும் வகையில் உள்ளதை சற்று குறைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியது.
ஆனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களிலும் தமிழ் மொழியில் பெயர் பலகை வைப்பது காட்டிலும் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் பெயர்ப்பலகை வைக்கப்பட்டு வருவதைக் கண்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி காஞ்சி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் பொன்மொழி தலைமையிலான நிர்வாகிகள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வணிக நிறுவனங்களில் தமிழ் பெயர் பலகை வைக்க வேண்டி வலியுறுத்தும் வகையில்,
வணிக நிறுவனங்களுக்கு அறிவுறுத்தவும் அப்படி செயல்படுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரி மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி இடம் மனு அளித்தனர். தமிழ் மொழியை போற்றும் தற்போதைய திமுக அரசு இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,
இதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வரும் எனவும் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் பொன்மொழி தெரிவித்தார் இந்நிகழ்வில் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் வெங்கடேசன், கார்த்திக், ராஜேந்திரன், சரவணன் மற்றும் ரகு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.