சுடுகாட்டு நிலத்தை மீட்டுத்தர கோரி ஆர்.டி.ஓ.,விடம் மனு
சக்கரம்பாளையத்தில் சுடுகாட்டு நிலத்தை மீட்டுத்தர கோரி ஆர்.டி.ஓ.,விடம் மனு அளிக்கப்பட்டது.
சக்கராம்பாளையம் கிராமத்தில் 300 வருடங்களாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டு நிலம் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் ஆர்.டி.ஓ., தாசில்தாரிடம் மனு அளித்தனர்.
திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் அருகே, கொண்ணையார் கிராமம், சக்கராம்பாளையம் அருந்ததியர் தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் கடந்த 300 வருடங்களாக, எலச்சிபாளையம் மெயின் ரோட்டில் உள்ள, கொண்னையார் திருமணிமுத்தாறு பாலம் அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வந்தனர். இதனிடையே தற்சமயம், சுடுகாட்டுக்கு அருகாமையில் உள்ள விவசாயத் தோட்டத்தை சேர்ந்த நல்லாம்பாளையம் சண்முகம் என்பவர் சுடுகாட்டில் உள்ள பனைமரம், வாதானமரம், புங்கமரம், கருவேலமரம் உள்ளிட்ட பல்வேறு மரங்களை வெட்டி 3லாரிகளில் விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், பல டிப்பர்கள் மூலம் ஜே.சி.பி., இயந்திரத்தை பயன்படுத்தி மண்ணை அள்ளி விற்பனை செய்தும், உடல் அடக்கம் செய்த இடத்தினை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் நிறவி ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதுகுறித்து, கொண்ணையார் ஊராட்சி நிர்வாகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவிக்கும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாதால், ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர்மீது வழக்குபதிவு செய்து, சுடுகாட்டு நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., சுகந்தியிடம் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட ஆர்.டி.ஓ., இம்மனுமீது உரிய விசாரணை செய்வதாக கூறினார். பின்னர், திருச்செங்கோடு தாசில்தார் விஜயகாந்திடமும் கோரிக்கை மனு அளித்தனர். சக்கராம்பாளையம் தர்மகர்த்தா நல்லமுத்து தலைமை வகித்தார். எலச்சிபாளையம் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், சி.பி.எம்., ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.