வாயில் கருப்பு துணிகளை கட்டிக்கொண்டு மனு
சேலத்தில் வாயில் கருப்பு துணிகளை கட்டிக்கொண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் மனு கொடுக்க வந்தனர்.
சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்த பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் பூபதி தலைமையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வாயில் கருப்பு துணிகளை கட்டிக்கொண்டு நூதன முறையில் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர். மேலும், அவர்கள் சாதி வன்கொடுமைகளை தடுத்து நிறுத்தக்கோரி பதாகைகளை கைகளில் எடுத்து வந்திருந்தனர். அப்போது நுழைவுவாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
இதனால் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து 5 பேர் மட்டும் கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க போலீசார் அனுமதித்தனர். இதுகுறித்து ஊர் பொதுமக்கள் கூறுகையில், உடையாப்பட்டி எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் தமிழக அரசால் வழங்கப்பட்ட பட்டா நிலத்தில் நாங்கள் விவசாயம் செய்து வருகிறோம். ஆனால் அதேபகுதியை சேர்ந்த சிலர் எங்களது நிலத்தின் அருகே இருக்கும் வேறு ஒரு நபரிடம் இருந்து அவரது நிலத்தை விலைக்கு வாங்கிக்கொண்டார்.
இதனால் அவ்வழியாக செல்ல முடியாமல் தடுப்பு வைத்து வழிதடத்தை அடித்துவிட்டதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறோம். உடையாப்பட்டியில் சாதி வன்கொடுமை நடக்கிறது. இது குறித்து பலமுறை போலீசில் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வாயில் கருப்பு துணிகளை கட்டிக்கொண்டு மனு கொடுக்க வந்தோம், என்றனர்.