பாஜக நிர்வாகி கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு - ஒருவர் கைது

பாஜக நிர்வாகி கடை மீது  பெட்ரோல் குண்டுவீச்சு - ஒருவர் கைது

 கொங்கு செல்வம் 

திருச்சுழி அருகே வீரசோழன் பகுதியில் முன் விரோதம் காரணமாக பாஜக நிர்வாகியின் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய கொங்கு செல்வம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகா T.புனவாசல் பகுதியை சேர்ந்தவரும், தற்போது A.தரைக்குடி பகுதியில் வசித்து வருபவருமான மல்ராஜ் என்பவர் மகன் லிங்கராஜன்(28). இவர் இராமநாதபுரம் மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளராக இருந்து வருகிறார். மேலும் இவர் வீரசோழன் வடக்குத் தெரு வில் டிஜிட்டல் பிளக்ஸ் மற்றும் ஸ்டூடியோ கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல லிங்கராஜ் நேற்று (03.02.2024) தனது கடையை திறந்து பணிகளை கவனித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது திடீரென தனது கடை முன்பு வெடி வெடிக்கும் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்துள்ளார். அப்போது இரண்டு மர்ம வாலிபர்கள் இவரது கடை மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தி விட்டு அடுத்து அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். மேலும் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதலில் லிங்கராஜன் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய நிலையில், இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து லிங்கராஜன் வீரசோழன் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்தில் திருச்சுழி டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், வீரசோழன் பகுதியைச் சேர்ந்த கொங்கு செல்வம் என்பவர் தனது கூட்டாளியுடன் சேர்ந்து கொண்டு லிங்கராஜனின் பிளக்ஸ் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியது தெரிய வந்தது. மேலும் லிங்கராஜனுக்கும், கொங்கு செல்வத்திற்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் குற்றவாளிகளை தேடி வந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான கொங்கு செல்வம் என்பவரை அதிரடியாக கைது செய்தனர்.

மேலும் எந்நேரமும் ஆள் நடமாட்டமுள்ள வீரசோழன் - அபிராமம் சாலையில் பட்டப்பகலில் இருவர் டூவீலரில் வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் பிளக்ஸ் கடை மீது பெட்ரோல் குண்டு வீசி தப்பிச்சென்ற இந்த சம்பவம் வீரசோழன் பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story