நகராட்சி சார்பில் பெட்ரோல் பங்க் - நகரமன்ற உறுப்பினா் கோரிக்கை

நாமக்கல் நகராட்சி சார்பில் பெட்ரோல் பங்க் அமைக்க வேண்டும் - நகரமன்ற உறுப்பினா் கோரிக்கை
நாமக்கல் நகராட்சி கூட்டம் நகர மன்ற தலைவர் து கலாநிதி தலைமையில் நடைபெற்றது ஆணையாளர் சென்னுகிருஷ்ணன் துணைத் தலைவர் செ.பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.
16 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் டி.டி.சரவணன் பேசும்போது, நாமக்கல் நகரப் பகுதிகளில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்வதற்கு கூடுதலான ஆட்களை புதிதாக நியமிக்க வேண்டும். நகரப் பகுதிகளில் நோய்த் தொற்று வராமல் பாதுகாக்கும் வகையில் புகை மருந்து அடிக்க வேண்டும். உழவர் சந்தை அருகில் காய்கறி விற்பனையாளர்கள் சாலைகளை ஆக்கிரமித்துக் கொள்வதால் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ஆகையால் ஆக்கிரமிப்பு அகற்றி அங்குள்ள காய்கறி விற்பனையாளர்கள் தினசரி மார்க்கெட்டில் கூடுவதற்கு வழிவகை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்
38 ஆவது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஈஸ்வரன் பேசும்போது, நகர்ப் புற பகுதிகளில் லே-அவுட் அனுமதி வழங்கும் போது அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்து, நீர்நிலைப் பகுதியா ? இல்லையா ? என ஆய்வு செய்த பிறகு அனுமதி வழங்க வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
34 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் எம்ரர் வ.இளம்பரிதி ஆணையாளரிடம் கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தார். அம்மனுவில் நகராட்சிக்குட்ட காலி இடங்களிலோ அல்லது பூங்கா சாலைப் பகுதியில் உள்ள அம்மா உணவகத்திற்கு அருகில் கவிஞர் திடலில் நயாரா என்ற பெட்ரோலியம் கம்பெனி மூலம் நகராட்சி சார்பில் பெட்ரோல் பங்க் அமைக்க வேண்டும். அதன் மூலம் நகராட்சியில் பயன்படுத்தும் வண்டிகளுக்கு மட்டும் ஒரு லிட்டருக்கு 4 ரூபாய் நமக்கு மீதியாகும்.
அது மட்டுமல்லாமல் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பேசி நாமக்கல் தாலுக்காவை சுற்றியுள்ள அனைத்து அரசு துறை வாகனங்களையும் அந்தப் பெட்ரோல் பங்கில் டீசல் அடிக்க செய்யும் பட்சத்தில், ஒவ்வொரு அரசு துறை வாகனங்களுக்கு ஒரு லிட்டருக்கு இரண்டு ரூபாய் கிடைப்பதோடு, பெட்ரோல் பங்கிற்கும் லிட்டருக்கு இரண்டு ரூபாயும் மீதம் ஆகும். எனவே, மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வலியுறுத்தி நமது நாமக்கல் நகராட்சிக்கும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு துறைக்கும் ஒரு லிட்டருக்கு இரண்டு ரூபாய் மீதமாகும்.
நயாரா கம்பெனியில் மட்டும் மூன்று மாதத்திற்கு 6 லட்சம் லிட்டர் விற்றால் லிட்டருக்கு இரண்டு ரூபாய் தள்ளுபடியை நயாரா கம்பெனி ஏற்றுக் கொள்கிறது. மற்ற நிறுவனங்கள் இதுபோன்று தள்ளுபடிகள் தருவதில்லை. எனவே நமது நாமக்கல் நகராட்சி சார்பில் நயாரா பெட்ரோலியம் கம்பெனி மூலம் புதிய பங்க் அமைத்து நகராட்சிக்கும், மற்ற அரசு துறைக்கும் மாதம் பல லட்சம் பணத்தை நாம் சேமிப்பதன் மூலம் மக்களுக்கு இன்னும் பல்வேறு திட்டங்களுக்கு செலவு செய்ய அந்த தொகை பயன்படும். எனவே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
9 வது வார்டு உறுப்பினர் ப.நந்தகுமார் பேசும் போது, முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை சரிவர வழங்கப்படாமல் உள்ளது. பொதுமக்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை உடனடியாக கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
