காலி பணியிடங்களை நிரப்பக் கோரி மருந்தாளுநர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் சார்பில் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1400 மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், 385 வட்டார மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடங்களை உருவாக்கிட வேண்டும்,
அனைத்து அரசு மருத்துவமனைகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகளை உரிய வெப்ப நிலையில் பராமரித்திட குளிர் பதன வசதியுடன் கூடிய மருந்து கிடங்குகளை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதும் நேற்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குமரி மாவட்டக் கிளை சார்பில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கோபி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் டைட்டஸ் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் ஞானப்பிரகாசம், மிக்கேல் ராஜ், விக்டர் ஜோன்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாநில செயலாளர் சுப்பையா கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
