வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2 ஆம் கட்ட பயிற்சி வகுப்புகள்
மக்களவைத் தேர்தல் -2024-முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சியா் உமா பார்வையிட்டார்
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2 ஆம் கட்ட பயிற்சி நடைபெற்று வருவதை நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு, கட்டுப்பாட்டு அறையிலிருந்து காணொளி மூலமாக அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். தொடர்ந்து, இராசிபுரம், எஸ்.ஆர்.வி பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், சேந்தமங்கலம் அக்கியம்பட்டி, வேதலோகா வித்யாலயா மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்செங்கோடு, தோக்கவாடி கே.எஸ்.ஆர் கல்லூரி, குமாரபாளையம் எஸ்.எஸ்.எம் லட்சுமி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் – 2024 முன்னிட்டு, 6 சட்டமன்ற தொகுதிகளில் 1,628 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றும் வகையில் அலுவலர்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி வாக்குச்சாவடி மையங்களில் வாக்கு பதிவு நாளான 19.4.2024 அன்று பணியாற்ற ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் தலா ஒரு முதன்மை அலுவலர் மற்றும் மூன்று நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலர்கள் என மொத்தம் 4 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 6 தொகுதியில் மொத்தம் 7,816 அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும், மக்களவை தேர்தல் 2024-ஐ சிறப்பாகவும், அமைதியாகவும், பொதுமக்களுக்கு எவ்வித சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக வாக்குச்சாவடி மையங்களில் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா அறிவுறுத்தினார்.
Next Story