குண்டர் சட்டத்தில் போட்டோகிராபர் சிறையில் அடைப்பு
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (65). கூலி தொழிலாளி. இவர் தக்கலையில் செயல்படும் ஒரு சுய உதவி குழுவில் ரூ 60 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இந்த கடனை வசூலிக்க சுய உதவி குழு ஊழியர்கள் ரெண்டு பேர் செல்வராஜ் வீட்டிற்கு சென்றனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த போட்டோகிராபர் ராதாகிருஷ்ணன் (47) என்பவர் சுய உதவி குழு ஊழியர்களை மிரட்டி துரத்தி விட்டார். இதனை செல்வராஜ் தட்டி கேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த ராதாகிருஷ்ணன் செல்வராஜன் வீடு புகுந்து தாக்கி மிரட்டல் விடுத்தார். இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த செல்வராஜ் குளச்சல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
இது குறித்து குளச்சல் போலீசார் ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராதாகிருஷ்ணன் தக்கலை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். இதுபோல் ராதாகிருஷ்ணன் மீது குளச்சல் போலீஸ் நிலையத்தில் ஏழு வழக்குகள் உள்ளன. காவல்துறை குற்றவாளிகள் பராமரிப்பு ஏட்டிலும் ராதாகிருஷ்ணன் பெயர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அம்பாள் நகர் செல்வராஜை தாக்கிய வழக்கில் ராதாகிருஷ்ணன் கடந்த 2 மாதமாக நாகர்கோவில் சிறையில் இருந்து வந்தார். இந்த நிலையில் ராதாகிருஷ்ணன் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதை அடுத்து குளச்சல் போலீசார் ராதாகிருஷ்ணன் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.