மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் விழிப்புணர்வு வாகன ஊர்வலம்
வாகன பேரணியை துவக்கி வைத்த ஆட்சியர்
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்குப்பதிவை செலுத்தும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாகன விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிருந்தாதேவி கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் அவர் வாகனங்களில் வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஓட்டினர்.
ஊர்வலம் திருவள்ளுவர் சிலை, மாநகராட்சி அலுவலகம் வழியாக சென்று மீண்டும் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தடைந்தது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் வாகனங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட அட்டைகளுடன் சென்றனர். இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி கூறியதாவது:- வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் சென்று வாக்களிக்கும் வகையில் அங்கு சாய்தள வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகளுடன் உதவியாளர் ஒருவரும் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது
. பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக வாக்கு எந்திரத்தில் சின்னம் குறித்து பார்வையற்றவர் தொட்டுப்பார்த்து உணர்ந்து கொள்ளும் பிரெய்லி முறையிலான எழுத்து வடிவம் சேர்க்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் இயக்க குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அவர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் 12 டி விண்ணப்பங்களை வழங்கி பின்னர் பூர்த்தி செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் சமர்ப்பித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்னன், தேர்தல் விழிப்புணர்வு பொறுப்பு அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.