ஒரத்தநாட்டில் டிச.19ல் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின், தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம், ஒன்றியத் தலைவர் எம்.தங்கப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்டத் தலைவர் டி.கஸ்தூரி, மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு வழிகாட்டினர். கூட்டத்தில், ஒன்றியப் பொருளாளர் எஸ்.வி.கவிதா, வி.சிவகுமார், சரளாதேவி, குமுதம், மதியழகன், கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், "உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து பல மாதங்களாக காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு, இதுவரை நிவாரணம் வழங்காததைக் கண்டித்தும், ஒரத்தநாடு வட்ட அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்தில் உள்ள பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்கும் போக்கை கண்டித்தும், ஒரத்தநாடு வட்ட அலுவலக வளாகத்தில் அமர்ந்து கொண்டு, மனு எழுதித் தருவதாக சிலர் மாற்றுத்திறனாளிகளிடம் பணம் பறிக்கும் போக்கை கண்டித்தும், இதுகுறித்து வட்டாட்சியரிடம் பலமுறை எடுத்துக் கூறியும், கண்டுகொள்ளாத போக்கை கண்டித்து, எதிர்வரும் டிசம்பர் 19ஆம் தேதி அன்று ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், அனைத்து கிளைகளிலும் பெயர்ப்பலகை வைத்து கொடியேற்றுவது, அனைத்து கிளைகளிலும் கிளைக் கூட்டம் நடத்தி மாற்றுத் திறனாளிகளின் பிரச்சனைகளை கேட்டறிந்து தீர்வு காண்பது" என முடிவு செய்யப்பட்டது.