விழுப்புரத்தில் குடியிருப்பு பகுதிகளில் கட்டுப்பாடின்றி சுற்றித்திரியும் பன்றிகள்
விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட எருமனந்தாங்கல் ஏரியில் பட்டி அமைத்து பன்றிகள் வளர்க்கப்படுகிறது. இதனால் கல்லூரி நகர், நாவலர் தெரு, இபி காலனி, பெருமாள்சாமி நகர்,ஜீவா நகர், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் பன்றிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு, பகல் பாராமல் 24 மணி நேரமும் பன்றிகள் சுற்றித்திரிகின்றன.
மேலும் உரிமையாளர்களால் பராமரிக்கப்படாமல் உள்ள காலிமனைகளில் குட்டிகளை ஈன்று, இன பெருக்கத்தை அதிகரிக்கிறது.
இவ்வாறு சுற்றித்திரியும் பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- எருமனந்தாங்கல் ஏரியில் பட்டி அமைத்து வளர்க் கப்படும் பன்றிகள், எங்களது குடியிருப்பு பகுதி களில் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. 24 மணி நேரமும் குடியிருப்புகளை சுற்றியே வலம் வருகின்றன. மேலும் காலியாக உள்ள மனைகளில் குட்டி களை ஈன்று, இனப்பெருக்கத்தையும் இங்குதான் மேற்கொள்கின்றன.
இதனால் நாளுக்குள் நாள் இங்கு வலம் வரும் பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கூடவே மக்களுக்கும் அச்சமும் அதிகரிக்கிறது. ஏனெனில், இந்த பகுதியில் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகிவிட்டது.
இதன் மூலம் தொற்றுநோய்கள் பரவும் அபாய நிலை உருவாகி இருப்பதால், குடியிருப்பு வாசிகள் கலக்கத்தில் உள்ளனர். சில சமயங்களில் பன்றிகளுக்கும், நாய்களுக்கும் மோதல் ஏற்படுகிறது. அப்போது பன்றிகள் உறும்புகிறது, நாய்கள் குரைக்கிறது. இதனால் வயதானவர்கள் தூக்கத்தை தொலைத்து அவதிப் படுகிறோம். சாக்கடையில் இருந்து வீட்டுக்குள் பன்றிகள் புகுந்து அசுத்தம் செய்கிறது. மேலும் எருமனந்தாங்கல் கிராமத்தில் விவசாய நிலங்களில் உள்ள பயிர்களையும் சேதப்படுத்தி, விவசாயிகளுக்கு இழப்பை ஏற்படுத்துகிறது. பன்றிகளை வளர்ப்பவர்கள், மேய்ச்சலுக்கு குடியிருப்பு பகுதிகளில் அனுப்பி விடுகின்றனர். எருமனந்தாங்கல் ஏரியில் கடந்த 20 ஆண்டுகளாக அமைக்கப்பட்டுள்ள பன்றிகளின் பட்டியை அகற்றி,
சுகாதாரத்தை பேணிக்காக்க வேண்டும் என சுகாதாரத்துறை, நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்தவித பலம் இல்லை. எங்களது குடியிருப்பு பகுதிகளில் குழந்தைகள், சிறுவர்கள், கர்ப்பிணி பெண்கள், முதியோர் உள்ளிட்ட அனைத்து வயது நிலையில் உள்ளவர்கள் வசிக்கின்றோம்.
இவர்கள் அனைவரது நலன்கருதி கட்டுப்பாடின்றி திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.