சாலைகளில் மணல் குவியல் - அகற்ற கோரிக்கை
மணல் குவியல்
மாவட்ட ஆட்சியருக்கு பாரதிய ஜனதா கட்சி ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் வெள்ளத்தாய் அன்னராஜ் விடுத்துள்ள கோரிக்கை மனு "நான் தூத்துக்குடிலிருந்து திருநெல்வேலி 4 வழி சாலையில் பல இடங்களில் ரோடு சேதமாகியும், இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் விபத்தினால் பாதிக்கப்படுகிறார்கள். நாணல்காடு விலக்கு, வசவப்புரம், பாறைக்குளம் விலக்குப்பகுதி, வல்லநாடு துப்பாக்கி சுடுதளம், உள்ளிட்ட பகுதிகளில் சாலைகள் சேதம் அடைந்துள்ளது.
சாலையின் சென்டர் மீடியனில் இரவு நேரங்களில் எதிரே வரும் முகப்பு விளக்கின் வெளிச்சம் மறைக்கும் வண்ணம் செடிகள் இல்லாததால் வாகன ஒட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகுகிறார்கள். மேற்படி சாலையின் வெள்ளை நிறக் கோடுகள் அழிந்துவிட்டதால் மீண்டும் கோடுகள் அமைக்க வேண்டும், சென்டர் மீடியனை ஒட்டி மணல் சேர்ந்துள்ளதால் அவற்றையும் அகற்ற வேண்டும். தூத்துக்குடி மாநகரப் பகுதியில் மணலும் தூசுகளும் சாலையின் நடுவிலும் இரு மருங்கிலும் சேர்ந்துள்ளதால் வாகன ஒட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே மணல் குவியலை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.