குன்றத்துார் அருகே குழாய் உடைப்பு - பீறிட்டு வெளியேறிய தண்ணீர்

X
குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
குன்றத்துார் அருகே சிக்கராயபுரம் கல்குவாரியிலிருந்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் ராட்சத குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது.
குன்றத்துாரை அடுத்த சிக்கராயபுரத்தில் உள்ள கல்குவாரியில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர், கோடைக்காலத்தில் சென்னை மக்களின் தாகம் தீர்க்க சுத்திகரிப்பு செய்து, குடிநீராக வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக கல்குவாரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரி கரையோரம் ராட்சத குழாய் பதித்து, ஏரியை ஒட்டியுள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. இந்த நிலையில், வண்டலுார்- மீஞ்சூர் வெளிவட்ட அணுகு சாலையை ஒட்டி, ராட்சத குழாயில் நேற்று காலை உடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் பீறிட்டு பாய்ந்து வெளியேறியது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள், பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கும், சென்னை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். கல்குவாரியில் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்கள், அங்கிருந்த வால்வுகளை அடைத்து, தண்ணீர் வெளியேறுவதை நிறுத்தினர். ராட்சத குழாயில் ஏற்பட்ட பிரச்னையை சரிசெய்த போது, அழுத்தம் காரணமாக உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியது தெரியவந்தது.
Tags
Next Story
