உசிலம்பட்டி மலைவாழ் கிராமங்களில் குழந்தைகளுக்கு பரவும் எலி காய்ச்சல்

உசிலம்பட்டி மலைவாழ் கிராமங்களில் குழந்தைகளுக்கு பரவும் எலி காய்ச்சல்

பைல் படம்

உசிலம்பட்டி அருகே மலைவாழ் கிராமங்களில் குழந்தைகளுக்கு எலிக் காய்ச்சல் பரவி வருவதாக தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு, அதே ஊரைச் சேர்ந்த தர்மராஜ் என்ற 3 வயது குழந்தை மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் 12 பேரும், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த காய்ச்சல் குறித்து அறிந்து கொள்ள மருத்துவர்கள் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் குழந்தைகளுக்கு பரவுவது எலிக் காய்ச்சல் என பரிசோதனை முடிவு வந்துள்ளதாக உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். எலி காய்ச்சலுக்கான மருந்துகள் உள்ள நிலையில் குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மேலும் காய்ச்சல் பரவாத வண்ணம் அந்த கிராமத்தில் மருத்துவ முகாம்கள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை உசிலம்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் நேரில் சென்று பார்த்து, அவர்களுக்கு அளித்து வரும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ ஐயப்பன், எலிக் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை தீவிரமாக கண்காணித்து முறையான மருத்துவர்களை கொண்டு அதிநவீன சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த காய்ச்சல் பெரியவர்களுக்கும் பரவும் என கூறப்படும் நிலையில் மாவட்ட நிர்வாகம் மொக்கத்தான்பாறை கிராமத்தில் முகாமிட்டு காய்ச்சல் பரவாத வண்ணம் உரிய சிகிச்சைகளை அளித்து மலைவாழ் மக்களை பாதுகாக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Tags

Next Story