ஊட்டியை மாநகராட்சியாக தரம் உயர்த்தினால் வழக்கு தொடர திட்டம்!
செய்தியாளர் சந்திப்பு
உலக புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்கும் ஊட்டி 30 சதுர கி.மீ., பரப்பளவை கொண்டுள்ளது. கடந்த 1987 முதல் சிறப்பு நிலை நகராட்சியாக இயங்கி வரும் ஊட்டி நகரில் 36 வார்டுகள் உள்ளன. 2010-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 88,430 பேர் ஊட்டி நகரில் வசித்தனர். தற்போது ஊட்டி நகராட்சியில் 1.75 கோடி பேர் வசிக்கின்றனர். 3 ஆயிரத்திற்கும் மேலான வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் உள்ளன.
1866-ம் ஆண்டு ஊட்டி நகராட்சி உருவான நிலையில், அதன் எல்லைகளை விரிவாக்கம் செய்து, மாநகராட்சியாக தரம் உயர்த்தும் பட்சத்தில் அதிகளவிலான அரசு திட்டங்கள், நிதி செயல்பாட்டுக்கு வருவதன் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் உயரும் எனும் நோக்கில், ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என திட்டமிடப்பட்டது.
இந்நிலையில், கடந்த 5-ம் தேதி நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, ஆணையாளர் ஏகராஜ் தலைமையில் நடந்த அவசர கூட்டத்தில் ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டது. ஊட்டி நகராட்சியுடன் அருகில் உள்ள கேத்தி மற்றும் இத்தலார் பேரூராட்சி, உல்லத்தி, நஞ்சநாடு, தொட்டபெட்டா ஆகிய ஊராட்சி பகுதிகள் ஊட்டியுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு கேத்தி உட்பட அனைத்து கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து கிராம மக்கள் நடத்திய முதற்கட்ட ஆலோசனைக் கூட்டத்தில், "ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,". இந்நிலையில் நடைபெற்ற இரண்டாம் கட்ட கூட்டத்தில்; ஊட்டி, சுற்று வட்டார கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஊட்டி நகராட்சியுடன் சுற்றுவட்டார கிராமங்களை இணைப்பது தொடர்பாக கிராம மக்களுடன் எந்தவித கருத்து கேட்காமல் பரிந்துரை செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக மாற்றும்போது வரி இரட்டிப்பாகிறது. பொதுவாக மாநகராட்சியாக மாற தேவையான அளவு இங்கு மக்கள் தொகை, தொழிற்சாலைகள் இல்லை. 100 நாள் வேலைத்திட்டம் பாதிக்கப்படும். கிராம பஞ்சாயத்திற்கு வழங்கப்படும் இலவச குடிநீர் கிடைக்காது. எனவே, ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக மாற்றும் திட்டத்தை கைவிடாவிட்டால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.