பூங்காவில் மரக்கன்றுகள் நடும் பணி
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி தெப்பக்குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி விரைவில் துவங்க உள்ளது. இப்பணிகளை மேயர் ஆய்வு செய்தார். மேலும், கருத்த பாலம் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் பாலம் அமைக்கும் பணிகளையும் பண்டாரம்பட்டி குளம், மாடங்குளம் மற்றும் சங்கரப்பேரி கண்மாய் சுற்றியுள்ள பகுதிகளில் மரங்கள், குளத்திற்கு நீர் வரும் பகுதிகள் மற்றும் அதனை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளிலுள்ள பூங்காக்களில் மரங்கள் நடும் பணி நடைபெற்று வருகிறது.
இதையொட்டி அம்பேத்கர் நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்டெம் பார்க்கில் மரங்கள் நடும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார். இதில், மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாநகர் நல அலுவலர் (பொறுப்பு) தினேஷ், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், பகுதி செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி, ஜெயசீலி, தெய்வேந்திரன், நாகேஸ்வரி, அந்தோணி மார்ஷலின், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.