நடைமேடை நீளத்தை அதிகரிக்க வேண்டும் : என்கான்ஸ் ஆலோசகர்

நடைமேடை நீளத்தை அதிகரிக்க வேண்டும் : என்கான்ஸ் ஆலோசகர்
ரயில் மேடை
ரயில்வே நடைமேடை தரம் உயர்த்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் - பட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் பாதையில், முக்கிய ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடையின் நீளத்தை அதிகரிக்க வேண்டும் என பட்டுக்கோட்டை என்கான்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் ஆலோசகர் வ.விவேகானந்தம், தெற்கு ரயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி மீட்டர் கேஜ் ரயில் பாதை 2019 ஆம் வருடம் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. இந்த ரயில் பாதையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களான அதிராம்பட்டினம், பேராவூரணி, அறந்தாங்கி, திருநெல்லிக்காவல்,

தில்லைவிளாகம் போன்ற ரயில் நிலையங்களின் நடைமேடை சுமார் 420 மீட்டர் நீளம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது 420 மீட்டர் நீளம் உள்ள நடைமேடையில் 24 மீட்டர் நீளம் கொண்ட எல்.ஹெச்.பி ரயில் பெட்டிகள் 17 பெட்டிகளும், 22.297 மீட்டர் நீளம் கொண்ட ஐ.சி.எப் ரயில் பெட்டிகள் 18 ரயில் பெட்டிகள் மட்டுமே நிற்க முடியும் அதிக ரயில் பெட்டிகள் கொண்ட நீண்ட தூர விரைவு ரயில்கள் இயங்கும் போது சுமார் ஐந்து ரயில் பெட்டிகள் நடைமேடையை விட்டு வெளியே நிற்கும்.

தற்போது இயக்கப்படும் விரைவு ரயில்களில் 22 ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் 24 ரயில் பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்படும் வாய்ப்புள்ளன. தற்போது இயக்கப்படும் செகந்திராபாத்- ராமநாதபுரம் சிறப்பு விரைவு ரயிலின் குளிர்சாதன ரயில் பெட்டிகள் அதிராம்பட்டினம்,

பேராவூரணி, அறந்தாங்கி போன்ற ரயில் நிலையங்களில் நடைமேடையை தாண்டி வெளியே நிற்கிறது தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் அதிவிரைவு ரயில் அதிராம்பட்டினம், பேராவூரணி ரயில் நிலையங்களில் வருங்காலத்தில் நின்று செல்லும் போது இதே நிலை ஏற்படும்.

இதனால் மாற்றுத் திறனாளிகள், முதியோர், பெண்கள், குழந்தைகள் நடைமேடைக்கு வெளியே நிற்கும் ரயில் பெட்டிகளில் இருந்து இருட்டிலும் பள்ளமான பகுதியிலும் மிகவும் சிரமப்பட்டு இறங்கி ஏறுகிறார்கள். அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் நடைமேடைக்கு வெளியே ரயில் பாதை ஓரங்களில் கருவேல முள் காடுகள் வளர்ந்துள்ளன.

இரவு நேரங்களில் இங்கு பாம்பு போன்ற விஷ உயிரினங்கள் கூட இருக்கலாம். இதனால் ரயில் பயணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் எனவே, நடைமேடை நீளம் குறைந்த அதிராம்பட்டினம், பேராவூரணி, அறந்தாங்கி, தில்லைவிளாகம் போன்ற ரயில் நிலையங்களின் நடை மேடை நீளத்தை குறைந்த பட்சம் 540 மீட்டர் வரையில் நீட்டிப்பு செய்ய வேண்டும்.

ரயில் நிலையங்களில் ரயில் பெட்டிகள் நிற்கும் இடங்களின் அருகில் வளர்ந்துள்ள கருவேலங் காடுகள், புதர்களை அழிக்க வேண்டும் தில்லைவிளாகம் ரயில் நிலையத்தில் பழுதடைந்துள்ள தார்ச்சாலையை சீரமைத்து, மதில் சுவர்களை கட்டித்தர வேண்டும்" என கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Next Story