பிளஸ் 2: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46 விழுக்காடு தேர்ச்சி

பிளஸ் 2: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46 விழுக்காடு தேர்ச்சி

தஞ்சாவூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 93.46 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர்.




தஞ்சாவூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 93.46 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46 விழுக்காடு பேர் தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தில் 227 பள்ளிகளைச் சேர்ந்த 25 ஆயிரத்து 734 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். இவர்களில் 24 ஆயிரத்து 52 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 93.46 விழுக்காடு ஆகும். மாவட்டத்தில் தேர்வு எழுதிய 11 ஆயிரத்து 819 மாணவர்களில் 10 ஆயிரத்து 710 பேரும், 13 ஆயிரத்து 915 மாணவிகளில் 13 ஆயிரத்து 342 பேரும் தேர்ச்சி பெற்றனர். அதாவது மாணவர்களில் 93.62 விழுக்காடு பேரும், மாணவிகளில் 95.88 விழுக்காடு பேரும் தேர்ச்சியடைந்தனர். மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆம் ஆண்டு 95.18 விழுக்காடு தேர்ச்சி பெற்ற நிலையில், நிகழாண்டில் தேர்ச்சி விகிதம் 1.72 விழுக்காடு குறைந்து விட்டது. மாநில அளவிலான சராசரி தேர்ச்சி விகிதம் 94.56 விழுக்காடு உள்ள நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் அதையும் விட 1.10 விழுக்காடு குறைந்துள்ளது.

மேலும், மாநில அளவிலான தேர்ச்சி விகித தர வரிசைப் பட்டியலில் கடந்த ஆண்டு 16 ஆவது இடத்தில் இருந்த நிலையில், நிகழாண்டு 26 ஆவது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. 54 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சி: தஞ்சாவூர் மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் மொத்தம் 54 பள்ளிகள் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. இதில், ஆலக்குடி, கரிசவயல், பின்னையூர், உறந்தைராயன்குடிக்காடு, தெக்கூர், கருக்காடிப்பட்டி, தஞ்சாவூர் மேம்பாலம் அரசு பார்வையற்றோர் மேல்நிலைப்பள்ளி உள்பட 8 அரசு பள்ளிகள் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. நூறு விழுக்காடு தேர்ச்சியிலும் கடந்த ஆண்டு 16 அரசு பள்ளிகள் உள்பட மொத்தம் 68 பள்ளிகள் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்ற நிலையில், நிகழாண்டு 54 பள்ளிகளாகக் குறைந்துள்ளது. அரசு பள்ளிகளில் 89.98 விழுக்காடு தேர்ச்சி: குறிப்பாக, மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. மாவட்டத்தில் சராசரி தேர்ச்சி விகிதம் 93.46 விழுக்காடு உள்ள நிலையில், அரசு பள்ளிகளில் 89.98 விழுக்காடாக உள்ளது. மாவட்ட சராசரியை விட அரசு பள்ளிகளில் 3.48 விழுக்காடு குறைவு.

இதேபோல, ஆதிதிராவிடர் நலத் துறை பள்ளிகளில் 51 மாணவ, மாணவிகளில் 45 பேர் தேர்ச்சி பெற்று 88.24 விழுக்காடு தேர்ச்சி விகிதத்தையும், மாநகராட்சிப் பள்ளிகளில் 53 பேர் தேர்வு எழுதியதில் 46 பேர் தேர்ச்சி பெற்று, 86.69 விழுக்காடு தேர்ச்சி விகிதத்தையும் பெற்றுள்ளன. சுயநிதி மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 98.50 விழுக்காடு பேரும், மாநில அரசின் பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுயநிதிப் பள்ளிகளில் 98.41 விழுக்காடு பேரும், அரசு பகுதி உதவி பெறும் பள்ளிகளில் 97.29 விழுக்காடு பேரும், சமூக நலத் துறையைச் சார்ந்த பள்ளிகளில் 93.75 விழுக்காடு பேரும், அரசு முழு உதவி பெறும் பள்ளிகளில் 91.02 விழுக்காடு பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story