சேலம் அருகே பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கும் பா.ஜனதா பொதுக்கூட்டம்

சேலம் அருகே பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கும் பா.ஜனதா பொதுக்கூட்டம்
முகூர்த்த கால் நடும் நிகழ்வு
சேலம் அருகே பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்ட மேடை அமைக்க கால்கோள் நடும் பணியை மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தொடங்கி வைத்தார்.

பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கும் பா.ஜனதா பொதுக்கூட்ட மேடைக்கு கால்கோள் நடும் பணியை மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தொடங்கி வைத்தார். சேலத்தில் வருகிற 19-ந்தேதி பா.ஜனதா கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது.

இதற்காக சேலம் அருகே உள்ள கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கப்படுகிறது. இதற்கான கால்கோள் நடும் பணி நேற்று நடைபெற்றது. இதற்கு மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ்விநாயகம் ஆகியோர் தலைமை தாங்கினர்.

மாவட்ட தலைவர்கள் சுரேஷ்பாபு, சண்முகநாதன், சுதிர்முருகன், ராஜேஷ்குமார், சத்தியமூர்த்தி, செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து பந்தல்காலை நட்டு வைத்து மேடை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தனர். அதன்பின்னர் மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சேலம், நாமக்கல், கரூர் நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்களை பிரதமர் மோடி சந்திப்பதற்கான பொதுக்கூட்டம் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. அன்று மதியம் 12.30 மணிக்கு பிரதமர் நரேந்திரமோடி பொதுக்கூட்ட மேடைக்கு வருகிறார். மதியம் 1 மணிக்கு சிறப்புரையாற்றுகிறார்.

தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெற தேர்தல் பணியாற்றி வருகிறோம். ஆதரவு அதிகரித்து உள்ளது பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள். இந்தியா முழுவதும் 543 தொகுதிகளிலும் பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. 2047-ம் ஆண்டு வரை மத்தியில் பா.ஜனதா ஆட்சியில் இருக்கும். பா.ஜனதா கட்சியின் பலத்தை காண்பிப்பதற்காக பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது.

ஓட்டுக்காக சிறுபான்மை மக்களை சில அரசியல் கட்சியினர் ஏமாற்ற பார்க்கிறார்கள். எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரங்களை முறியடித்து, மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்போம். பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு அடிக்கடி வருவதால், பா.ஜனதாவுக்கு மக்களின் ஆதரவு அதிகரித்து உள்ளது. வாக்கு சதவீதம் அதிகரித்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story