கவிஞர் தமிழ் ஒளி 60 வது நினைவுநாள் சிறப்புக் கருத்தரங்கம் !
கருத்தரங்கம்
தஞ்சாவூரில், கவிஞர் தமிழ் ஒளி 60 வது நினைவுநாள் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.
தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், கவிஞர் தமிழ்ஒளி 60 வது நினைவுநாள் சிறப்புக் கருத்தரங்கம் மொழிப்புல அவையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார். பதிவாளர் சி.தியாகராஜன், மொழிப்புலத்தலைவர் பேராசிரியர் ச.கவிதா முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில், தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் தலைவர் பேராசிரியர் இரா.காமராசு சிறப்புரையாற்றினர். அப்போது அவர் பேசியதாவது, “தமிழ் ஒளி தஞ்சாவூரில் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டம் பயின்றவர். அவருக்கு தமிழ்நாடு அரசு தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் திருவுருவச்சிலை அமைத்திருப்பது பொருத்தமானது. தமிழ் ஒளி கவிதை, காவியம், நாடகம், சிறார்கதை, சிறுகதை, திறனாய்வு, ஆராய்ச்சி முதலிய பல துறைகளிலும் தடம் பதித்தவர். அவர் தொடக்கத்தில் பாவேந்தர் தொடர்பில் பகுத்தறிவு சுயமரியாதைக்காரராகத் திகழ்ந்தார். தமிழ் ஒளி படைப்புகளைப் பாவேந்தர் பாராட்டினார். பின்னர் ஜீவா தொடர்பில் பொதுவுடைமை இயக்கத்தில் இணைந்தார். மே தினத்தைப் போற்றி எழுதினார். சீனப் புரட்சியை வரவேற்றார். இந்தி எதிர்ப்பு, குமரி எல்லைப்போராட்டம் பற்றியெல்லாம் கவிதைகள் படைத்தார். அவரின் படைப்புகளில் கவிச்சிறப்பும் பொருள் ஆழமும் சிறந்து விளங்கின. ‘வீராயி’ காப்பியம் தமிழ் தலித் இலக்கிய முன்னோடிப் படைப்பு எனலாம். வாழ்வில் ஏராளம் சிரமப்பட்டு முகவரி அற்றவராக, குடும்பம், வீடு இல்லாதவராக இருந்தார். ஆனால் தமிழ் ஒளி தமிழின் நிரந்தர முகவரி ஆனார். பாரதி, பாரதிதாசன் வரிசையில் மக்கள் கவிஞராக தமிழ் ஒளி திகழ்கிறார். அவர் தமிழ் இலக்கியப் பேரொளியாக என்றும் ஒளி பாய்ச்சி நிலைத்து நிற்கிறார்.” என தமது உரையில் குறிப்பிட்டார். முன்னதாக கருத்தரங்க ஒருங்கினைப்பாளர் முனைவர் சீ.இளையராஜா வரவேற்றார். முனைவர் மா. இரமேஷ்குமார் நன்றி கூறினார். ஆய்வாளர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்.
Next Story