விஷம் குடித்த கூலித் தொழிலாளி கடைக்காரர் பலி
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே ஏமன்பட்டி பிள்ளையார் கோவில் தெருவில் வசித்தவர் முனியராஜ் மகன் மகேஷ் (வயது 40). இவர் அப்பகுதியில் கோழிக்கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. இதற்காக இவர் ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்துள்ளார். இருப்பினும் வயிற்று வலி குறையவில்லை. இதனால் மன வேதனை அடைந்த மகேஷ் நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.
அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வாசுதேவநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மகேஷ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து வாசுதேவநல்லூர் காவல் ஆய்வாளர் கண்மணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.