தப்ப முயன்ற குற்றவாளியை சுட்டு பிடித்த போலீசார்

தேவகோட்டை அருகே தப்ப முயன்ற குற்றவாளியை போலீசார் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை உட்கோட்டம், காளையார் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்லுவழி கிராமத்தில் கடந்த 25.01.2024ம் தேதி நள்ளிரவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சின்னப்பன், உபகாரமேரி, வேதபோதக அரசி, ஜெர்லின், ஜோபின் ஆகியோரை தாக்கி கொள்ளையடித்துச்சென்றது தொடர்பாக காளையார்கோவில் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கின் எதிரிகளை கண்டுபிடிக்க காவல் ஆய்வாளர் ஆடிவேல் தலைமையில் சிங்கம்புணரி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் சரவணக்குமார், தேவகோட்டை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திருமலைச்சாமி மற்றும் காளையார்கோவில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் குகன் மற்றும் இராமநாதபுரம் மாவட்டம், கேணிக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சித்திரைவேல் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, இவ்வழக்கில் தொடர்புடைய எதிரியை தேடி வந்த நிலையில் சந்தேகத்திற்கிடமான தென்னீர்வயலை சேர்ந்த தினேஷ்குமார் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை செய்த போது அவர் தேவகோட்டை கண்ணனங்கோட்டை மற்றும் காளையார் கோவில் காவல் நிலையத்திற்கு உட்பட்ட முடுக்கூரணி மற்றும் கல்லு வழி மற்றும் வேலாயுதபட்டிணம் ஆகிய இடங்களில் கொலை கொள்ளை செய்ததை ஒப்புக்கொண்டார்.

மேலும் அவர் கொடுத்த ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் வழக்கில் கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் ஆகியவற்றை கைப்பற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்த இடத்திற்கு சாட்சி மற்றும் தினேஷ்குமாரை, காளையார்கோவில் காவல்நிலைய ஆய்வாளர் ஆடிவேல் தலைமையிலான காவல்துறையினர் தினேஷ் குமாரின் மாமனாரான நாச்சியப்பன் வீட்டிற்கு சென்று அங்கு மறைத்து வைத்திருந்த வழக்கின் சொத்துக்களை கைப்பற்றியும், கொலை மற்றும் கொள்ளை சம்பங்களுக்கு பயன்படுத்திய ஆயுதங்களை கைப்பற்ற தினேஷ்குமார் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் தேவகோட்டை தென்னீர்வயல் முத்தூரணி என்ற ஊரணி அருகே உள்ள புதரில் இருந்து மேற்குறிப்பிட்ட சாட்சிகளின் முன்னிலையில் சுமார் 02 அடி நீளமுள்ள ஒருபக்கம் கூர்மையாகவும், மறுபுறம் தட்டையாகவும் கொண்ட கொலைக்கு பயன்படுத்திய கடப்பாரை ஆயுதத்தை கைப்பற்றி உடன் வந்திருந்த காவலர் தெய்வேந்திரன் வசம் ஒப்படைத்து வாகனத்தில் தினேஷ் குமாரை ஏற்ற முற்பட்ட போது தினேஷ்குமார் ஆயுதத்தை பறித்து தப்பி ஓடுவதற்காக கொலை செய்யும் நோக்கத்தோடு அங்கிருந்த சார்பு ஆய்வாளர் சித்திரை வேல் என்பவரை நெஞ்சை நோக்கி குத்த வந்த போது அவர் சுதாரித்து ஒதுங்கி கொண்டதில் இடது தோள்பட்டையில் கீழ் காயம் ஏற்பட்டது.

அங்கிருந்த சார்பு ஆய்வாளர் சரவணக்குமார் என்பவரை கொலை செய்யும் நோக்கத்தோடு தாக்கியதில் அவருக்கு இடது கையில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்த காவல் ஆய்வாளர் ஆடிவேல் என்பவர் பலமுறை எச்சரித்தும் கேளாமல் கொலை செய்யும் நோக்கத்தோடு மீண்டும் தாக்க முற்பட்டதால், அங்கிருந்தவர்களையும் அவர்களையும் கொலை செய்யக்கூடும் என்பதால் வானத்தை நோக்கி ஒருமுறை சுட்டும் எச்சரித்தும் கேட்காததால், தினேஷ்குமாரை நோக்கி சுட்டதில் இடது பக்க முழங்காலுக்கு கீழ் காயம் ஏற்பட்டது.

காயம்பட்ட சார்பு ஆய்வாளர்கள் மற்றும் எதிரி தினேஷ்குமாருக்கு சிகிச்சை அளிக்க 108 ஆம்புலன்ஸ் மூலம் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து எதிரி தினேஷ்குமார் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த சார்பு ஆய்வாளர் இது தொடர்பாக சரவணக்குமார் கொடுத்த புகாரின் பேரில் தேவகோட்டை தாலுகா காவல் ஆய்வாளர் சரவணன் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். மேலும், இது தொடர்பாக சிவகங்கை உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் சிபிசாய் சௌந்தர்யன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Tags

Next Story