போலீஸ் தாக்குதல்: இழப்பீடு வழங்காததை கண்டித்து தீக்குளிக்க முயற்சி

போலீஸ் தாக்குதல்: இழப்பீடு வழங்காததை கண்டித்து தீக்குளிக்க முயற்சி

தீக்குளிக்க முயன்றவர் 

போலீஸ் தாக்குதலால் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட தனக்கு இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டும் இதுவரை வழங்கப்படவில்லை என கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே செலவடை கிராமத்தை சேர்ந்தவர் மணி (49). விவசாயியான இவர், நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். பின்னர் அவர் திடீரென பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரம் அடைந்த மணி, பையில் வைத்திருந்த மனுக்களை சாலையில் வீசி எறிந்து எனக்கு நியாயம் வழங்க வேண்டும் எனக்கூறி கூச்சலிட்டார்.

அப்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, கடந்த 2014-ம் ஆண்டு சூதாட்ட வழக்கில் ஜலகண்டாபுரம் போலீசார் தன்னை கைது செய்தனர். அப்போது, சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கடுமையாக தாக்கியதில் எனது முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டது. இதுபற்றி மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்து வழக்கு தொடரப்பட்டு எனக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கவும், அந்த தொகையை என்னை தாக்கிய சப்-இன்ஸ்பெக்டரிடம் இருந்து அரசு வசூலித்து கொள்ளவும் உத்தரவிடப்பட்டது. ஆனால் இதுவரை இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. இதுபற்றி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. உடல்நலம் பாதிக்கப்பட்டதால் வேலைக்கு செல்ல முடியவில்லை. இதனால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்துள்ளேன், என்றார். இதையடுத்து அவரிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story