பெண் விவகாரத்தில் சிக்கிய காவலர் தூக்கிட்டு தற்கொலை..!

காவலர் தற்கொலை
நீலகிரி அருகே காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அணிக்காடு பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் இவருடைய மனைவி சசிகலா(26) . இவர்களுக்கு 7 வயதில் ஒரு ஆண், 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். தம்பதியினர் அந்தப் பகுதியில் கூலித் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர். இந்தநிலையில் அய்யப்பன் மற்றும் சசிகலா தம்பதியினர் குடும்பத் தகராறு காரணமாக ஒரு ஆண்டுக்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இதனால் சசிகலா அதே ஊரில் உள்ள தனது உறவினர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சசிகலாவுக்கும், மஞ்சூர் அடுத்த சிவசக்தி நகரை சேர்ந்தவரும், ஊட்டியில் போக்குவரத்து காவலராக பணியாற்றி வந்த கண்ணன்(25) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்வதாக கண்ணன் ஆசை வார்த்தை கூறி அவருடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதற்கிடையே கடந்த நவம்பர் 23-ந் தேதி கண்ணனுக்கு, வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது. தன்னை விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்ய கண்ணன் முடிவு செய்ததால் சசிகலா அதிர்ச்சி அடைந்தார். எனவே கண்ணனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பலமுறை வற்புறுத்தி வந்துள்ளார். கண்ணன் மறுத்து விட்டதால், அவருடைய திருமணத்திற்கு முன்னர் 21ம் தேதி சசிகலா விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மஞ்சூர் காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான போலீஸார் சந்தேக மரணம் (ஐ.பி.சி.174) என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சசிகலாவின் செல்போனை ஆய்வு செய்த போது அதில் கண்ணனும் சசிகலாவும் சேர்ந்து இருப்பது போன்ற புகைப்படங்கள் இருந்தது. இதுகுறித்து சசிகலாவின் உறவினர்கள் மஞ்சூர் காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்தனர்.
மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., பாஸ்கர், காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தி, சந்தேக மரணம் என்ற வழக்கை, தற்கொலைக்கு தூண்டுதல் என மாற்றி (ஐ.பி.சி. 306) கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் கைதான கண்ணனுக்கு, சசிகலா இறந்த அடுத்த நாள் 23-ம் தேதி திருமணம் நடந்துள்ளது.
இதற்கிடையே வழக்கில் சிக்கியதால் திருமணமான அடுத்த நாள் 24-ம் தேதி தேதி, அவர் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையால் கண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் ஜாமீனில் வெளியில் வந்த கண்ணன் இன்று பணியில் மீண்டும் சேர்வதாக இருந்தது. ஆனால் இளம்பெண் வழக்கில் சிக்கி பணியிடை நீக்கம் நீக்கம் செய்யப்பட்டதால் கண்ணனின் மனைவியும் அவரை பிரிந்து விட்டார்.
பிரிந்து சென்ற மனைவியை சமாதானம் செய்து வீட்டிற்கு திரும்ப அழைத்து வந்துவிடலாம் என்று கண்ணன் முயற்சி செய்த நிலையில் அவருடைய மனைவி வர மறுத்து விட்டார். இதனால் மனமுடைந்த கண்ணன் நேற்று இரவு விஷம் குடித்து மயங்கி கிடந்தார். மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
