ரோட் ஷோவிற்கு அனுமதி மறுப்பு-காவல்துறை விளக்கம்
வரும் 18ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ரோட் ஷோ நிகழ்வில் பங்கேற்க உள்ள நிலையில் இதற்கு மாநகர காவல்துறை அனுமதி மறுத்துள்ள நிலையில் அதற்கான விளக்கம் அளித்துள்ளது. அரசு மாண்புமிகு பாரத பிரதமர் சாலை மார்க்கமாக பொதுமக்களை சந்திக்கும் நிகழ்வு நடைபெற அனுமதி கோரியுள்ள சாய்பாபா காலனி மற்றும் வட பகுதிகளானது கங்கா மருத்துவமனை உள்ளிட்ட பல்நோக்கு மருத்துவமனைகள்,மத்திய மற்றும் மாநில அரசு அலுவலங்கள், போக்குவரத்து பணிமனை, பேருந்து நிலையம்,பள்ளி மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள்,முக்கிய வணிக நிறுவனங்கள் மற்றும் காய்கறி சந்தைகள் ஆகியவை நிறைந்த பகுதிகளாகும்.
எனவே பள்ளி,கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் வீடுகளுக்கும், அதே போன்று பிற அலுவலகங்களுக்கு செல்வோர் வீடுகளுக்கு திரும்பும் மாலை நேரம் என்பதாலும் சாய்பாபா காலனி மற்றும் வட கோவை பகுதிகள் மிகுந்த ஜன நடமாட்டத்துடனும் போக்குவரத்து மிகுந்தும் மாலையில் காணப்படும் என்பதாலும் அவர்களது அன்றாட பணிகள் இதர செயல்பாடுகளுக்கும் மற்றும் போக்குவரத்துக்கும் மிகுந்த இடையூறு நேரிடும் என கருதப்படுகிறது.
மேலும் மருத்துவ அவசர தேவைகளுக்காக அடிக்கடி ஆம்புலன்ஸ் வாகனங்கள் இப்பகுதியிலுள்ள முக்கிய மருத்துவமனைகளுக்கு அடிக்கடி செல்கின்றன என்பதாலும் இந்நிகழ்ச்சியை அனுமதிப்பதன் வாயிலாக அவசர மருத்துவ ஊர்தி சேவைகள் பாதிப்புக்குள்ளாகலாம் என கருதப்படுகிறது. 2) தற்போது கோவை மாநகரம் உள்ளிட்ட மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும் 10-LD மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அது தொடர்பாக மாணாக்கர்கள் தேர்வுகளுக்கு தயாராகியும் தேர்வுகளை எழுதியும் வருகிறார்கள்.எனவே இச்சந்தர்ப்பத்தில் மேற்படி நிகழ்ச்சியை அனுமதிக்கும் பட்சத்தில் மாணாக்கர்களது தேர்வுக்கு இடையூறு நேரும் எனக்கருதப்படுகிறது.
3) மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களது பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு நுண்ணறிவு தகவல்கள் மத்திய மற்றும் மாநில நுண்ணறிவுப்பிரிவு அமைப்புகள் சார்பாக தொடர்ந்து பெறப்பட்டு வருகிறது.மேற்படி நுண்ணறிவுத் தகவல்களின் அடிப்படையில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மத மற்றும் பிற தீவிரவாத அமைப்புகளால் மிகுந்த பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சந்தர்ப்பத்தில் கவனிக்கத்தக்க அம்சம் என்னவெனில் பொதுக்கூட்டம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கும்பொழுது மேற்படி நிகழ்ச்சிகளுக்கு வருவோர் ஒவ்வொருவரையும் பொதுக்கூட்ட நுழைவு வாயில் பகுதிகளில் DFMD-களை பொருத்தியும் HHMD உள்ளிட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு கருவிகள் துணை கொண்டும் பரிசோதிப்பது போன்று சாலை மார்க்கமாக சுமார் 4.0-கி.மீ தொலைவிற்கு நடத்த உத்தேசித்துள்ள நிகழ்வில் (Road show) சாலையின் இரு புறங்களிலும் கூடும் பெருந்திரளான மக்களில் ஒவ்வொரு தனி நபரிடமும் அபாயகரமான பொருட்கள் மற்றும் வெடிபொருட்கள் வைத்திருத்தல் தொடர்பான சோதனைகளை மேற்கொள்வது என்பது மிகுந்த கடினமான செயலாகும்.இவ்வாறு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.