நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு போலீசார் கொடி அணிவகுப்பு
இந்தியாவில் 7 கட்டமாகவும் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகவும் நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரியில் நாடாளுமன்ற தேர்தலை அமைதியாக முறையில் நடத்தவும், அனைவரும் வாக்களிப்பதற்கான நம்பிக்கையை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் துணை ராணுவத்தினர் மற்றும் போலீஸார் 200 பேர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
ஊட்டி தாவரவியல் பூங்கா அருகே உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையம் அருகே தொடங்கிய இந்த அணிவகுப்பு சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, லோயர் பஜார் சாலை வழியாக பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அருணா, காவல் கண்காணிப்பாளர் சுந்தர வடிவேல், கூடுதல் ஏ.டி.எஸ்.பி., கள் சவுந்தரராஜன், தங்கவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் காந்தல் முக்கோண முதல் ரோகினி சந்திப்பு வரை கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. பந்தலூர் பகுதியிலும் கொடி அணிவகுப்பு நடந்தது. கூடலூர், கோத்தகிரி, குன்னூர், உள்ளிட்ட இடங்களிலும் கொடி அணிவகுப்பு நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.