குற்றச்செயல்களில் ஈடுபட போலீசார் வற்புறுத்தல் - தீக்குளிக்க முயற்சி
சுரேஷ்
சேலம் அன்னதானப்பட்டி கருவாட்டு மண்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (30), கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர் தான் மறைத்து கொண்டு வந்திருந்த பாட்டிலில் வைத்திருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி திடீரென தீக்குளிக்க முயன்றார். இதைபார்த்த அங்கிருந்த போலீசார் அவரை பிடித்து மண்எண்ணெய் பாட்டிலை பிடுங்கினர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர்.
இது குறித்து சுரேஷ் கூறியதாவது:- எனக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளன. ஏற்கனவே செய்த குற்றத்திற்காக சிறைக்கு சென்று ஜாமீனில் வெளியில் வந்து உள்ளேன். கடந்த பல மாதங்களாக எந்த குற்றத்திலும் ஈடுபடாமல் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறேன். ஏற்கனவே செய்த குற்றத்திற்காக வழக்கு விசாரணைக்காக மட்டும் கோர்ட்டுக்கு சென்று வருகிறேன். போலீசார் மிரட்டுகின்றனர் இந்த நிலையில் கடந்த சில நாட்களாக போலீசார் விசாரணை என்ற பெயரில் என்னை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர். இல்லை என்றால் மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்து விடுவோம் என்று போலீசார் என்னை மிரட்டுகின்றனர். எனவே நிம்மதியாக வாழ முடியாது என்று நினைத்து, தற்கொலை செய்து கொள்வதற்காக தீக்குளிக்க முயன்றேன். இவ்வாறு அவர் கூறினார்.