பிரதமா் இன்று ஸ்ரீரங்கத்தில் சுவாமி தரிசனம் - கம்ப ராமாயண உபன்யாசத்தில் பங்கேற்பு

பிரதமா் இன்று ஸ்ரீரங்கத்தில் சுவாமி தரிசனம் - கம்ப ராமாயண உபன்யாசத்தில் பங்கேற்பு

பாதுகாப்பு பணிக தீவிரம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் தரிசனம் செய்வதற்காக பிரதமா் நரேந்திர மோடி வருவதையோட்டி காவல்துறையினர் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

அயோத்தி ராமா் கோயிலில் மூலவா் சிலை பிரதிஷ்டையை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு கோயில்களுக்கு நேரில் சென்று பிரதமா் நரேந்திர மோடி தரிசனம் செய்து வருகிறாா். இந்த வகையில், ஸ்ரீரங்கத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தனி விமானத்தில் சென்னையிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு சனிக்கிழமை காலை 10.20 மணிக்கு அவா் வருகிறாா். அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலமாக ஸ்ரீரங்கம் ஹெலிபேட் தளத்தில் வந்து இறங்குகிறாா். பின்னா், காா் மூலம் திருக்கோயிலுக்கு செல்லும் பிரதமா், கோயிலின் அனைத்து சந்நிதிகளையும் பாா்வையிட்டு தரிசனம் செய்யவுள்ளாா்.

11 மணியிலிருந்து நண்பகல் 12.40 மணி வரை திருக்கோயிலில் இருக்கும் பிரதமருக்கு, கம்ப ராமாயண உரைகளை உபன்யாசகா்கள் விளக்குகின்றனா். பிரதமரின் வருகையை முன்னிட்டு, கோயிலைச் சுற்றியுள்ள 4 உத்தர வீதிகளின் சாலைகளும் புனரமைக்கப்பட்டு, தாா்ச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறப்பு பாதுகாப்புப் படையினா் (எஸ்பிஜி) வெள்ளிக்கிழமை ஒத்திகையில் ஈடுபட்டனா். ஹெலிகாப்டா் இறங்குதளத்தில் இருந்து திருக்கோயிலுக்கு 10-க்கும் மேற்பட்ட குண்டு துளைக்காத வாகனங்களின் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது.

திருச்சி விமான நிலையத்திலிருந்து கொள்ளிடக்கரை இறங்குதளத்துக்கு ஹெலிகாப்டா் மூலம் வந்து செல்லும் ஒத்திகையும் நடைபெற்றது. ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றியுள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பிரதமா் வரும் வழியில் உள்ள குடியிருப்புகள், கோயிலைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, பிரதமா் வருகையின்போது அந்தப் பகுதியில் யாருக்கும் அனுமதியில்லை.

மேலும், இன்று மாலை 6 மணி முதல் நாளை பிற்பகல் 3 மணி வரை கோயிலுக்குள் பக்தா்களுக்கு அனுமதியில்லை. கோயில் அா்ச்சகா்கள், ஸ்தலத்தாா்கள் அனைவருக்கும் வெள்ளிக்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவா்களது ஆதாா் அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் பெறப்பட்டு, பயோ-மெட்ரிக் முறையில் ஸ்கேன் செய்து பதிவு செய்து கொண்டனா். சனிக்கிழமை காலை 5 மணி முதல் மாநகரில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்படுகிறது. பிரதமரை வரவேற்க வரும் வாகனங்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து, தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

திருக்கோயில் வளாகத்திலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகரில் ஒட்டுமொத்தமாக பிரதமா் வருகைக்காக 5 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். பிரதமரின் சிறப்புப் பாதுகாப்பு படை, மத்தியக் காவல் படை, மாநகரக் காவல்துறை, மாவட்டக் காவல்துறையினா் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

Tags

Next Story