கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை தட்டித் தூக்கிய போலீஸ்
பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார் கோயில் திருக்குளம் அருகே வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த மர்மநபரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார் கோயில் திருக்குளம் அருகே வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார் சித்திரா பௌர்ணமி 12 நாள் திருவிழா, கடந்த 14 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிலையில், காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் -100 க்கு போன் செய்த ஒருவர், பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார் கோயில் தெப்பக்குளம் அருகே வெடிகுண்டு உள்ளதாக கூறியுள்ளார். இதையடுத்து பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு, சோதனை இட்டதில் வெடிகுண்டுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை. தேரோட்டம் எவ்வித அசம்பாவிதம் இன்றி அமைதியாக நடந்தது.
தொடர்ந்து, தொலைபேசி எண்ணை ஆய்வு செய்த காவல்துறையினர், மிரட்டல் விடுத்தவரின் முகவரியைக் கண்டறிந்து, மயிலாடுதுறை அருகே உள்ள செம்பனார்கோயிலை சேர்ந்த சிங்காரவேலு (35) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில், காவல் துறையினரிடம், சிங்காரவேலு கூறியது, கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு, பேராவூரணி பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்னாள் கோவிலில் ஸ்தபதியாக வேலை செய்ததாகவும், தேரோட்ட நிகழ்ச்சியை யூடியூப் சேனல் மூலம் நேரடியாக பார்த்துக் கொண்டிருந்த போது, குடிபோதையில் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு இருப்பதாக தவறுதலாக உளறி விட்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அவர் மீது பேராவூரணி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து பேராவூரணி நீதிமன்றத்தில் நேர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.