பெட்ரோல் பங்குகளில் காவல் துறையினர் திடீர் சோதனை
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பெட்ரோல் பங்குகளில் காவல் துறையினர் திங்கள்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டத்தில், விதிமுறைகளை மீறி பெட்ரோல் பங்குகளில் வாகனங்கள் அல்லாத பிளாஸ்டிக் கேன் உள்ளிட்டவற்றில் பெட்ரோல் கொடுக்கப்படுவதாகக் காவல் துறையினருக்கு புகார்கள் வந்தன.
இதன் பேரில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் பெட்ரோல் பங்க்களில் திங்கள்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில், கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் காவல் நிலையத்துக்கு உள்பட்ட மாடாகுடியில் பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் விற்பனை செய்ததற்காக பெட்ரோல் பங்க் ஊழியர் மணிவண்ணன் மீதும், தனது பெட்டிக்கடையில் பெட்ரோலை சில்லரை விற்பனை செய்ததற்காக ஒரத்தநாடு உட்கோட்ட வெட்டிக்காடு சில்லத்தூர் பகுதியைச் சேர்ந்த முத்தையன் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், தொடர்புடைய பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் விளக்கம் கேட்டு அழைப்பானை அனுப்பப்பட்டுள்ளது. எனவே பெட்ரோல் பங்குகளில் வாகனம் அல்லாத பிளாஸ்டிக் கேன் உள்ளிட்டவற்றில் பெட்ரோலை விற்பனை செய்யக் கூடாது என்றும், பொதுமக்கள் யாரும் அவ்வாறு சில்லரை வியாபார முறையில் பெட்ரோலை விற்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்படுகிறது" என மாவட்டக் காவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.