காவல்துறை மோப்ப நாய் உயிரிழப்பு - துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி

தஞ்சாவூரில், காவல்துறை மோப்ப நாய் சீசர் வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தது. இதையடுத்து காவல்துறையினர் துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர்.

தஞ்சாவூர் மாவட்ட காவல் துறையில் சீசர் என்ற பத்து வயதுடைய மோப்ப நாய் கடந்த 10.3.2015 அன்று பணியில் சேர்ந்தது. இந்த நாய் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் பிரிவில் நிபுணத்துவம் பெற்றது. இதையடுத்து தமிழகத்தில் பிரதமர், முதல்வர் மற்றும் முக்கிய விருந்தினர்கள் வருகையின் போது, அவர்கள் செல்லக்கூடிய வாகனங்கள், அப்பகுதியில் நடைபெறும் மேடை நிகழ்வுகளில் முன்னதாக வெடிகுண்டுகள் ஏதும் உள்ளதா என மோப்பம் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை காலை ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு, காவல் துறையினர் சீசரைக் கொண்டு சென்றனர். அங்கு கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்த போது சீசர் நாய் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, வெள்ளிக்கிழமை மாலை தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை மோப்ப நாய் பிரிவு அலுவலகம் அருகே சீசர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத், துணை காவல் கண்காணிப்பாளர்கள் ராஜா, நித்யா ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து 3 ரவுண்டுகள் துப்பாக்கி குண்டுகள் முழங்க நாய்க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Tags

Next Story