சேலத்தில் மயங்கி கிடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் - ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த எம்.எல்.ஏ

X
ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த எம்.எல்.ஏ
சேலத்தில் மயங்கி கிடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை எம்.எல்.ஏ. அருள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்
சேலம் அன்னதானப்பட்டி லைன்மேடு மாநகர ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் பாபு (வயது 55). மாநகர ஆயுதப்படையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று மதியம் 1.45 மணிக்கு ஜாகீர் அம்மாபாளையம் வெண்ணங்குடி முனியப்பன் கோவில் பகுதியில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென மயக்கம் ஏற்பட்டதால் சாலையோரம் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். பின்னர் அவர் சாலையோரம் மயங்கி விழுந்தார். அப்போது ஓமலூர் ரோட்டில் இருந்து சேலம் வழியாக காரில் வந்த சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் சாலையோரம் ஒருவர் மயங்கி கிடப்பதை பார்த்து உடனடியாக தனது டிரைவரிடம் காரை நிறுத்துமாறு கூறினார். பின்னர் அவர் கீழே இறங்கி உயிருக்கு போராடிய சப்-இன்ஸ்பெக்டர் பாபுவுக்கு தானே முதலுதவி செய்தார். இதையடுத்து அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு வேறு ஒரு காரை ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தார். அங்கு சப்-இன்ஸ்பெக்டர் பாபுவை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சாலையோரம் மயங்கி கிடந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு காரில் வந்த அருள் எம்.எல்.ஏ. முதலுதவி அளித்து உயிரை காப்பாற்ற முயற்சித்த மனிதநேய செயலை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர். இதனிடையே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரின் உயிரை காப்பாற்றும் முயற்சியில் எம்.எல்.ஏ. ஈடுபட்ட வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
Next Story
