போலியோ சொட்டு மருந்துமுகாம்

போலியோ சொட்டு மருந்துமுகாம்

மாவட்ட ஆட்சியர்

விருதுநகர் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் வரும் மூன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிறந்ததிலிருந்து 5 வயதிற்குட்பட்ட (0-5 வயது) அனைத்துக் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது. இதில் விருதுநகர் மாவட்டத்தில் 1,56,830 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், சாவடிகள், கோயில்கள் ஆகிய இடங்களில் 1137 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இம்மையங்களில் காலை 7.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். ஏற்கனவே முறையான தவணைகளில் சொட்டு மருந்து கொடுக்கப்பட்டிருந்தாலும் இம்முகாமிலும் சொட்டு மருந்து தவறாது கொடுக்கப்பட வேண்டும். லேசான காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு இருந்தாலும், போலியோ சொட்டு மருந்து கொடுக்கலாம்.

இம்முகாமில் 4548 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். இதில் சுகாதாரப் பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் அடங்குவார்கள். குழந்தைகளுக்கு இடது கை சுண்டு விரலில் மை அடையாளம் வைக்கப்படும். இம்மாவட்டத்தில் 25 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு, இலங்கை அகதிகள் முகாம், நரிக்குறவர்கள் மற்றும் தற்காலிக குடியிருப்புகளில் வசிக்கும் பிறந்ததிலிருந்து 5 வயதிற்குட்பட்ட (0-5 வயது) குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 40 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு ரயில்வே நிலையம், பேருந்து நிலையங்கள், சோதனைச் சாவடிகள், கோயில் திருவிழாக்கள் மற்றும் திருமண விழாக்களில் உள்ள குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் ஒரே தவணையாக 03.03.2024 தேதியன்று போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது.

ஆகையால் பொதுமக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளை இந்த போலியோ சொட்டு மருந்து முகாமிற்கு அழைத்துச் சென்று குழந்தைகளை போலியோ நோயிலிருந்து பாதுகாத்து போலியோ இல்லாத சமுதாயத்தை அமைக்க ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags

Next Story