நாமக்கல் மாவட்டத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் !

நாமக்கல் மாவட்டத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் !

போலியோ சொட்டு மருந்து

நாமக்கல் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் போலியோ இல்லாத சமுதாயத்தை உருவாக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்டத்தில் நாளை நடைபெறும் போலியோ சொட்டு மருந்து முகாம்களில், 1.15 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 3ம் தேதி) நடைபெற உள்ள போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் உமா நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேசியதாவது, இளம்பிள்ளை வாதம் போலியோ வைரஸால் பாதிக்கப்பட்டு முடமாக்கக்கூடியதும், மரணத்தை வரவழைப்பதுமான தொற்றுநோய் ஆகும். மாசடைந்த நீர் அல்லது உணவு வாய் வழியாக உட்கொள்ளப்படும் போது தொற்று ஏற்படுகிறது. போலியோ வைரஸ் ரத்தத்தில் கலந்துவிட்டால் பலவகையான அறிகுறிகள் தோன்றுகின்றன. இந்நோய் சுவாசப்பாதை மற்றும் இரைப்பை குடல் உபாதைகள் தோற்றுவிக்கும். நிமோனியா, நிரந்தர தசை வாதம் மற்றும் சிறுநீர் பாதை தொற்று ஆகியவை இந்நோயினால் ஏற்படும் சிக்கல்கள் ஆகும். இந்தியாவில் 2011-ம் ஆண்டு இறுதியாக போலியோ நோய் பதிவு செய்யப்பட்டது. உலக சுகாதார நிறுவனம் 2014-ல் போலியோ இல்லாத இந்தியா என சான்று அளித்தது. எனினும் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் போலியோ தொற்று இன்று வரை இருப்பதினால், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நாளை 3ம் தேதி போலியோ சொட்டு மருந்து, முகாம்கள் மூலம் கொடுக்கப்படுகின்றது. 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை விடுபட்ட குழந்தைகளுக்கு, வீடுகளுக்கே சென்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் முகாமில் 1,15,600 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்காக கிராமப்பகுதியில் 1170 முகாம்களும், நகராட்சி பகுதியில் 208 முகாம்களும், மொத்தம் 1378 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணியில் சுமார் 4418 பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர். மேலும் மக்கள் கூடும் இடங்களான பஸ் நிலையம், ரயில் நிலையம், சந்தைகள், சினிமா அரங்குகள், கோயில்கள், சுங்கச்சாவடி போன்ற இடங்களில் 48 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 27 நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. அரசு வழங்கும் போலியோ சொட்டு மருந்து தரமானது, வீரியம் மிக்கது, பாதுகாப்பானது. எனவே மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், குறிப்பாக தாய்மார்கள் தங்கள் வீடுகளில் உள்ள அன்று பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் மீண்டும் தற்போது நடைபெறும் முகாம்களில், போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ இல்லாத சமுதாயத்தை உருவாக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார். கூட்டத்தில் மருத்துவ பணிகள் இணை இயக்குநர் ராஜ்மோகன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் பூங்கொடி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story