மாட்டு வண்டியில் வந்து மனு அளித்த அரசியல் கட்சியினர்!
மனு அளிக்க வந்தவர்கள்
கோவை ரயில் நிலையத்தின் வழியாக இயக்கப்படாமல் போத்தனூர்,இருகூர் ரயில் நிலையங்கள் வழியாக வட மாநிலங்களில் இருந்து வரும் ஆறு ரயில்கள் கேரளாவிற்கு இயக்கப்படுகிறது.வட மாநிலங்களில் இருந்து இயக்கப்படும் இந்த ஆறு ரயில்களையும் கோவை ரயில் நிலையம் வழியாக இயக்கப்பட வேண்டும் என ரயில்வே அதிகாரிகளிடம் அரசியல் கட்சியினர் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் ஆலப்புழா சென்னை எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் டெல்லி கேரளா எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி திர்புர்கார் எக்ஸ்பிரஸ்,எர்ணாகுளம் பாட்னா எக்ஸ்பிரஸ் , கொச்சுவேலி யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் உட்பட ஆறு ரயில்களை கோவை ரயில் நிலையம் வழியாக இயக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி மாட்டு வண்டியில் சென்று மனு அளிக்கும் போராட்டம் நடத்தப்பட்டது.
கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள கீதாகபே பகுதியில் இருந்து அனைத்து கட்சியைச் சேர்ந்தவர்கள் இரு மாட்டு வண்டியில் சென்று மனு அளித்தனர். இந்த போராட்டத்தை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் துவக்கி வைத்தார்.தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன்,திமுக,மதிமுக,சிபிஐ, விடுதலை சிறுத்தைகள்,மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் இதில் பங்கேற்றனர். மாட்டு வண்டியில் முழக்கங்களை எழுப்பிய படி மனு அளிக்க வந்த அவர்கள் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.இந்த மனு அளிக்கும் போராட்டத்தின் பொழுது திமுகவினர் கைகளில் வடைகளுடன் வந்து மோடி சுட்ட வடை எனக்கூறி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.மாட்டு வண்டியில் வந்து மனு அளிக்கும் போராட்டம் காரணமாக ரயில் நிலையம் முன்பாக சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.