அரசியல் கட்சிக் கொடிகளை அகற்றிட வேண்டும் :ஆட்சியர்
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்
இந்திய தேர்தல் ஆணையம் 16.03.2024 அன்று பிற்பகல் 03.00 மணியளவில் தேர்தல் அறிவிப்பினை வெளியிட்டதை தொடர்ந்து 36 தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த தேர்தல் நடத்தை விதிகளின்படி முதல் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ளது. இதன்படி முதல் 24 மணி நேரத்திற்குள் அரசு கட்டிடங்கள், அரசு வளாகங்களில் உள்ள சுவர் விளம்பரங்கள், காலண்டர்கள், தலைவர்களின் படங்கள் அகற்றப்பட்டிருக்க வேண்டும். அறிவிப்பு வெளியான 48 மணி நேரத்திற்குள் பொது இடங்கள், பொது வளாகங்களிலும் அதே போல் 72 மணி நேரத்திற்குள் தனியார் இடங்கள் கட்டிடங்கள் ஆகியவற்றில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், சுவரொட்டிகள், பதாகைகள், கொடிகள், கொடிகம்பங்கள் ஆகியவை அகற்றப்பட வேண்டும்.
இது குறித்து ஏற்கனவே வெளியிடப்பட்ட பத்திரிக்கை செய்தியிலும், அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கூட்டத்திலும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி நாளை 19.03.2024 மாலை 03.00 மணிக்குள் கட்டடங்கள், சுவர்களில் வரையப்பட்டுள்ள விளம்பரங்கள், பதாகைகள், அரசியல் தலைவர்களின் படங்கள், கொடிகள், கொடிகம்பங்கள் ஆகியவற்றினை அகற்றிட வேண்டுமென்பதால், சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தனியார் இடங்களில் உள்ள கொடிகள், கொடிகம்பங்கள் சுவரொட்டிகள், விளம்பரங்கள், பதாகைகள் ஆகியவற்றினை தாமாக முன்வந்து அகற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தவறும் பட்சத்தில் அரசு செலவில் அகற்றப்பட்டு சம்பந்தப்பட்ட கட்சியினர்/ வேட்பாளர்களின் செலவின கணக்கில் சேர்க்கப்படுவதோடு, சம்பந்தப்பட்ட சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது என தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.