கால்நடைகளை உயிர் பலி வாங்க காத்திருக்கும் பாலிதீன் குப்பைகள்
பாலிதீன் குப்பைகள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் குவிந்து கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளால் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. சிவகாசி ஊராட்சி ஒன்றியம், செங்கமலநாச்சியாா்புரம் முதல்நிலை ஊராட்சிப் பகுதியில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் நெகிழிப் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஊராட்சி நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை முன்னேடுத்து வருகின்றது. ஊராட்சியில் உள்ள டீக்கடை, ஓட்டல் கடை, பெட்டிக்கடை, பலசரக்கு கடை, சூப்பர் மார்க்கெட் உள்பட கடைகளுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பாக பிளாஸ்டிக் தடை குறித்த அறிவி்ப்பு பலகை வைக்கப்பட்டன.
பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையிலும் மஞ்சப்பை அவசியம் குறித்தும் அவ்வப்போது பள்ளி. கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது. இருந்த போதிலும் இந்த ஊராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாடு குறைக்கமுடியாமல் ஊராட்சி நிர்வாகம் திணறி வருகின்றது. ஊராட்சியில் ஆங்காங்கே சாலையோரம், வாய்க்கால், நீர் நிலைகள், புறம்போக்கு நிலங்களில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. திரும்பிய பக்கம் எல்லாம் பிளாஸ்டிக் கழிவுகள் காட்சி அளிக்கிறது. பிளாஸ்டிக்கால் சுற்றுச் சூழல், நீர் வளம், நிலவளம் ஆகியவை பெரும் சீர்கேடு அடைகிறது.
சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளில் பிளாஸ்டிக் பைகள் குப்பைகள்தான் அதிகமாக காணப்படுகின்றது. பொதுமக்கள், கடை உரிமையாளர்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திவிட்டு வீசி சென்று விடுகின்றனர். இந்த பிளாஸ்டிக்குப்பை களை உண்ணும் கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே ஊராட்சியில் மக்கள் தொகைக்கு ஏற்ப துப்பரவு வாகனங்கள் வசதி இல்லாததால் குப்பைகள் ஆங்காங்கே தேங்கி தீ வைக்கப்படுகின்றது. இதனால் பொதுமக்கள் பெரும் சுகாதார சீர்கேட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் ஊராட்சி நிர்வாகம் முன்னேடுக்கும் முயற்சிக்கு பொதுமக்கள் வர்த்தக கடை உரிமையாளர்கள் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க முடியும் என ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன் கூறும்போது, பல்வேறு விதமான விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்டுதான் உள்ளோம். ஜனவரி 1ம் தேதி முதல் வெறும் 5 சதவிகித பிளாஸ்டிக் பயன்பாடு மட்டும் குறைந்துள்ளது. ஊராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கும் வகையில் ஊராட்சியில் உள்ள 183 வர்த்தக கடைகளுக்கும் குப்பை தொட்டிகள் வழங்க உள்ளோம். பிளாஸ்டிக் பயன்படுத்தும் வர்த்தக கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. விரைவில் செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சி பிளாஸ்டிக் இல்லா ஊராட்சியாக மாறும் என்று கூறினார்.