அமைச்சர் குடும்ப அதிகாரத்துக்கு ஜூன் 4-ம் தேதி முற்றுப்புள்ளி -பொன். ராதாகிருஷ்ணன்
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் இன்று கன்னியாகுமரி பகுதியில் இருந்து திறந்த வாகனத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, குமரி மாவட்ட நான்குவழிச் சாலையை பொறுத்தவரை இயற்கையை பாதுகாக்க தான் அமைச்சர் மனோ தங்கராஜ் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் என சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் கூறியிருப்பது கேவலமாக உள்ளது. நான்குவழிச் சாலைப் பணி 2016 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. அதன் பின் 2019 வரை இவர்கள் இயற்கை அழிவது பற்றி கவலைப்படவில்லை. அதன் பின்னர் தான் இவர்களுக்கு ஞானோதயம் பிறந்துள்ளது.
நான்குவழிச் சாலை வரக்கூடாது என்பது அவர்களது நோக்கம்.இன்னொரு நோக்கம் தற்போது செயல்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தி நான்குவழிச் சாலையாக மாற்றுவது. இதன் மூலம் களியக்காவிளையில் உள்ள பழமையான புனித அந்தோணியார் தேவாலயத்தை உடைப்பது, மற்றும் 32 தேவாலயங்கள், 30 கோயில்கள் 4 மசூதிகளை இடித்து மாவட்டத்தில் மத கலவரங்களை உருவாக்குவதே நோக்கமாக உள்ளது.
குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு வழிபாட்டு தலம் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாஜகவின் இரட்டை இலக்க வெற்றி பகல் கனவு என அமைச்சர் மனோ தங்கராஜ் கூறிவருகிறார். ஆனால் அடுத்த தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியிலிருந்து அவர் டெப்பாசிட் வாங்க முடியாது என்பதே உண்மை. இந்த தேர்தலில் கன்னியாகுமரி தொகுகியில் பாஜக வெற்றிபெறும். நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள், நமது மாவட்டத்தில் உள்ள மக்களை முட்டாளாக்க கூடிய மனோ தங்கராஜின் குடும்ப அதிகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்ககூடிய நாளாக ஜூன் 4 அமையும். என்றார் அவர்.