ஊத்தங்கரையில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கல்
பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்சி திருமண மண்டபத்தில் பொங்கல் திருநாள் முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவமனை பொறுப்பு மருத்துவ அலுவலர் ப.மதன்குமார் தலைமை தாங்கினார். தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய பொறுப்பு நிலைய அலுவலர் ராமமூர்த்தி, ரெட் கிராஸ் துணைத் தலைவர் எம்.ராஜா, ஆடிட்டர் சே.லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஊத்தங்கரையில் உள்ள அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் சிவானி சில்ஸ்க் உரிமையாளர் த.மோகன்ராஜ் புத்தாடைகளை வழங்கினார். பொங்கல் திருநாள் முன்னிட்டு தூய்மை பணியாளர்கள் அனைவரும் புத்தாடைகளை அணிய வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆண் தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி, சர்ட், பெண் தூய்மை பணியாளர்களுக்கு புடவைகள் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியின் இறுதியில் ஒருவருக்கொருவர் இனிப்பு பரிமாறிக் கொண்டு, பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஜேஆர்சி ஆசிரியர் கு.கணேசன் செய்திருந்தார்.