அரசு கலைக்கல்லூரியில் பொங்கல் விழா
அரசு கலைக்கல்லூரியில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா
தமிழர்களின் பாரம்பரியத்தை எடுத்துரைக்கும் தைத் திருநாள் பொங்கல் விழா இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அரசுக்கலைக் கல்லூரியில் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக மாணவ, மாணவிகள் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். இதற்காக தமிழர்களின் பாரம்பரிய உடையான சேலை மற்றும் வேஷ்டி அணிந்து வந்திருந்த மாணவ, மாணவிகள் செங்கரும்பு வைத்து, பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்தனர்.
அப்போது கூடியிருந்த மற்ற மாணவ, மாணவிகள் குலவையிட்டும், "பொங்கலோ பொங்கல்" என ஆர்பரித்தும் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டனர். இந்த சமத்துவ பொங்கல் விழாவில், சாதி மற்றும் மதங்களை கடந்து நாம் அனைவரும் தமிழர்கள் என்ற ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், அனைத்து மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி முதல்வர், பேராசிரியர்களுடன் இணைந்து இந்த சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்வதாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.