பெரம்பலூரில் பொங்கல் விழா: போட்டிகளை தொடக்கி வைத்த ஆட்சியர்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில், அரசு அலுவலர்களுக்கான பொங்கல் விழா போட்டிகளை மாவட்ட ஆட்சியர் கற்பகம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலையில் ஜனவரி 12ஆம் தேதி துவக்கி வைத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் .
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையிலும், அரசு அலுவலர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், சிறப்பு பொங்கல் விழா இன்று, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இதில் பானை உடைத்தல், இசை நாற்காலி, சிலம்பம், கண்ணாடி குடுவையில் நீர் நிரப்புதல் போன்ற தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் முன்னிலையில் வழங்கினார்.
முன்னதாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் தமிழர்களின் பாரம்பரிய முறைபடி பொங்கல் வைத்து வழிபட்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் மீனா அண்ணாதுரை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயஸ்ரீ, திட்ட அலுவலர்கள் பிரேமஜெயம், அருணா, உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.