காஞ்சியில் களைகட்டிய பொங்கல் பொருட்கள் விற்பனை
பொங்கல் பானை
தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான, பொங்கல் பண்டிகை, துவங்கி,மாட்டுபொங்கல், காணும் பொங்கல் என, தொடர்ந்து மூன்று நாட்களுக்கு உற்சாகத்துடன் கொண்டாடப்பட உள்ளன. இந்த பண்டிகைகளை முன்னிட்டு வெளி மாவட்டங்களில் இருந்து, காஞ்சிபுரத்திற்கு கரும்பு, மஞ்சள் கொத்து, பூக்கள், காய்கறிகள், வாசலில் வண்ண கோலமிட கலர் கோலமாவு என சந்தைகளில் விற்பனைக்கு குவிக்கப்பட்டு உள்ளன. பண்டிகை விற்பனை களைகட்ட துவங்கியுள்ளன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.
பூக்களின் வரத்து குறைந்து உள்ளதால், காஞ்சிபுரம் பூக்கடை சத்திரத்தில் நேற்று பூக்களின் விலை அதிகரித்துள்ளன. அதன்படி, மல்லிகைப்பூ, 2,500 ரூபாய்; முல்லை 2,000; காக்கட்டான் 1,200; ஜாதிமல்லி 1,400; கனகாம்பரம் 1,200, சம்பங்கி, 100; சாமந்தி 100; ரோஜா 120, விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்து இருந்தாலும், பூக்கடை சத்திரத்தில் பூக்கள் வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், நெரிசலையும் பொருட்படுத்தாமல் பூக்களை வாங்கி செல்கின்றனர். காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள தற்காலிக காய்கறி சந்தை மற்றும் ரயில்வே சாலையில் உள்ள காய்கறி கடைகளில் கூட்டம் அதிகமாக காண முடிகிறது. காய்கறிகளின் விலை, 20 - 50 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது.