ரூ.2,000 லஞ்சம் கேட்ட பூந்தமல்லி பெண் இன்ஸ்பெக்டர் மாற்றம்
புகார் பதிய ரூ.2,000 லஞ்சம் கேட்ட பூந்தமல்லி பெண் இன்ஸ்பெக்டர், லஞ்சம் கேட்டது உறுதியானதை அடுத்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.
பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா, 30. இவர், குடும்ப பிரச்னை காரணமாக, பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கணவர் மீது சமீபத்தில் புகார் அளித்தார். வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் இந்திராணி, சி.எஸ்.ஆர்., எனும் சமூக பதிவேடு பதிய 2,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்; அந்த தொகையை, 'ஜிபே' செயலி வாயிலாக அனுப்பும்படி கூறியுள்ளார். திவ்யாவிடம் மொபைல் போனில் இன்ஸ்பெக்டர் இந்திராணி பேசிய ஆடியோ பதிவு, சமூக வலைதளங்களில் நேற்று முன்தினம் பரவியது. இதையடுத்து, ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர், இந்திராணியை நேரில் அழைத்து விசாரித்தார். இதில், லஞ்சம் கேட்டது உறுதியானதை அடுத்து, இந்திராணியை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி கமிஷனர் உத்தரவிட்டார்.
பூந்தமல்லி அனைத்து பெண்கள் காவல் நிலையத்தில், கர்ப்பிணியாக இருந்த நான்கு பெண் போலீசாருடன் சேர்ந்து, வழக்கு விசாரணைக்கு வந்த 15 வயது சிறுமிக்கு, இன்ஸ்பெக்டர் இந்திராணி கடந்த வாரம் வளைகாப்பு நடத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு வந்த பெண்ணிடம் 2,000 ரூபாய் லஞ்சம் கேட்ட விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.