போலீசாருக்கான தபால் வாக்குப்பதிவு துவக்கம்
ஆட்சியர் ஆய்வு
சேலம் மாவட்டத்தில் போலீசார் வாக்களிக்கும் வகையில் குகை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு கலைக்கல்லூரி ஆகிய 2 இடங்களில் சிறப்பு வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. அங்கு போலீசார் வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்தனர். இந்த வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிருந்தாதேவி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தலையொட்டி சேலம் மாவட்டதில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் தங்களது தபால் வாக்கினை இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பு வாக்குச்சாவடிகளில் பதிவு செய்யலாம். அந்த வகையில் மாநகர காவல் துறையில் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 1,875 போலீசார் குகை ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், புறநகர் காவல் துறையில் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 2 ஆயிரத்து 335 போலீசார் அரசு கலைக்கல்லூரியிலும் என மொத்தம் 4 ஆயிரத்து 210 போலீசார் தபால் வாக்கு செலுத்தும் வகையில் சிறப்பு வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தபால் வாக்குப்பதிவு நடைபெறும் பணிகளை வேட்பாளர்கள் அல்லது வேட்பாளர்களின் பிரதிநிதிகள் பார்வையிடும் வகையிலும், வாக்குப்பதிவு நடைமுறைகளை வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த 2 நாட்களிலும் தங்களது தபால் வாக்குகளை செலுத்த இயலாத போலீசார் வருகிற 15-ந் தேதி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்படும் தபால் வாக்குப்பெட்டியில் வாக்கு செலுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என கூறினார்.